வாழ்வில் அனைத்தும் கிடைக்க வாராஹி

2 weeks ago 3

தேவியை வழிபடும் முறைக்கு “சாக்தம்’’ என்று பெயர். இந்த சாக்தம் எங்கும் தேவியின் விதவிதமான வடிவங்களை பற்றி சொல்கிறது. அந்த வடிவத்தை வழிபடும் முறைகள் என அனைத்தும் சொல்லி இருக்கிறது. அதில் முக்கியமாக இருப்பது வாராஹி தேவியின் வழிபாடு. சாக்தத்தில் வாராஹிதேவி மூன்று விதமாக விளங்கு கிறாள். பராசக்தியான தேவி, லலிதா  பரமேஸ்வரியின் படைத்தளபதியாக இருக்கிறாள், வாராஹி தேவி. சப்த மாதர்ககளில் ஒரு தேவியாக காட்சி தருகிறாள், வாராஹிதேவி. மூன்றாவதாக குண்டலினி யோகத்தில், பஞ்சமியாக இருந்து, சாதகனின் யோக அப்பியாசத்தில் உதவுகிறாள்.

இப்படி பலவாறு பல விதமாக பக்தர்களுக்கு அருள் செய்வதாக பல தந்திரசாஸ்திர நூல்கள் சொல்கிறது. அந்த ரூபங்கள் அனைத்தையும் உணர்ந்து, தெளிந்து உபாசித்து, நற்கதி பெற வேண்டும் என்றால் ஒரு ஜென்மம் போதாது. இருப்பினும், குறைந்தபட்சம் வாராஹி அம்பிகையின் விதவிதமான ரூபங்களை பற்றி தெரிந்து கொண்டு, அன்னையின் பெருமையை ஒரு சிறு அளவாவது உணர முயற்சி செய்வோம் வாருங்கள்!

தீய குணங்களை பொசுக்கும் தூம்ரவாராஹி

புகையின் வண்ணத்தில் இருக்கும் இந்த தேவி, சாதகனின் எதிரிகளை தண்டிக்கிறாள். இங்கே சாதகனின் எதிரி என்றால், சாதகனின் உலகாய வாழ்க்கையின் எதிரி என்று கொள்ள வேண்டும். ஒரு சாதகன், தேவியை அடைய தடையாக இருக்கும், அவனுடைய ஆணவம், காமம், குரோதம், போன்ற தீய குணங்களை, அறிவின்மையை இந்த தேவி இல்லாமல் செய்கிறாள். ஆகவே, சாதகனால் மேற்கொண்டு சாதனையில் முன்னேற முடிகிறது. சூரியன், சந்திரன் மற்றும் அக்னி என்ற மூன்று கண்களை உடையவள் இந்த தேவி. அதாவது அறியாமை என்ற இருளை நீக்க, ஞானம் என்ற கண்களை உடையவள். ஆகவே, இந்த தேவியின் கடைக்கண் பார்வைபடும் போது, சூரியனை கண்ட இருளை போல, அறியாமை நீங்குகிறது.

கைகளில், திரிசூலத்தையும் அங்குசத்தையும் தாங்கும் இந்த வாராஹிதேவி, அனைத்து ஜீவன்களாலும் முனிவர்களுக்கும் சேவிக்கப்படுகிறாள். ஆணவ மலம், கர்ம மலம், மாயா மலம் என்ற மூன்று மலங்களை அழிக்கும் திரிசூலத்தை கையில் தரித்தவளாக, குரோதம் முதலிய தீய குணங்களை அழிக்கும் பாசத்தை கொண்டவளாக இந்த வாராஹி காட்சி தருகிறாள். இந்த வாராஹியின் மந்திரத்தின் உடைய ரிஷி, கால மிருத்யு ரிஷி. பிருஹதி சந்தஸ்ஸில் அமைந்திருக்கிறது இந்த தேவியின் மந்திரம். இந்த தேவியின் பீஜம் “தூம்’’ என்பதாகும். இந்த வாராஹியை வணங்கினால், சாதகனின் அறியாமை நீங்கி, ஞானம் சித்திக்கும். தீய குணங்கள் நீங்கி, நற்குணங்கள் வாய்த்து, தேவியை அடைய வழி பிறக்கும்.

ஆயுதங்களின் வடிவில் அருளும் அஸ்திரவாராஹி

இந்த வாராஹி தேவியானவள், நமது உள்ளேயும் வெளியேயும் இருக்கும் எதிரிகளை நாசம் செய்கிறாள். நமது மனதில் இருக்கும் தீய குணங்கள் என்ற எதிரியையும், நமது சத்ருக்களின் மனதில் இருக்கும் வெறுப்பு என்ற எதிரியையும் இந்த தேவி வெல்கிறாள். ஒரு சிங்கம் எப்படி வேகமாக பாய்ந்து ஒரு பசுவை வேட்டையாடுகிறதோ, அப்படியே சத்ருக்களின் உயிரை குடிக்கிறாள் இந்த வாராஹிதேவி. இந்த தேவி தனது கையில் அங்குசம் தரித்து இருக்கிறாள். அந்த பாசம் கொண்டு, மதம் கொண்ட யானை போன்ற உபாசகனின் மனதை அடக்கி அருள் செய்கிறாள்.

தனது கையில் இருக்கும் பாசம் என்ற ஆயுதத்தால், காமம், குரோதம் முதலிய தீய குணங்களை கட்டி அடக்கி அருள் செய்கிறாள். மேலும், இந்த தேவி விரோதியை உண்கிறாள் என்று தந்திரங்கள் சொல்கிறது. அதாவது, உபாசகனின் உடலில் இருக்கும் வியாதி முதலிய எதிரிகளை நசித்து அருள்கிறார் தேவி.

ஒரு ஆயுதம் எப்படி கையில் இருப்பவனுக்கு பாதுகாப்பாக அமைகிறதோ, அதே போல சாதகனை காத்து அவனது எதிரியை அழித்து அருள் செய்கிறாள். இந்த தேவியின் மந்திரத்தை நமக்கு தந்தது “கால ம்ருத்யு’’ என்ற ரிஷி. இந்த தேவியின் மந்திரம் “ப்ருஹதி சந்தஸ்ஸில்’’ அமைத்திருக்கிறது. இந்த தேவியின் பீஜம் “பட்’’ என்று சொல்லப்படுகிறது.

உபாசகனின் உள்ளும் புறமும் இருக்கும் எதிரியை வென்று அருளும் இந்த தேவியை வணங்கி அனைத்து வித அருளையும் பெறுவோம்.

சம்சாரத்தில் இருந்து காக்கும் கிராதவராஹி

பிறவி கடல் என்பது ஒரு பெரும் காடு போன்றது. இந்த திக்கு தெரியாத காட்டில் இந்த ஆன்மா திரிந்து கொண்டிருக்கிறது. இந்த ஆன்மாவை, இதனுடைய பாவம் புண்ணியம், தீய குணங்கள், மனம் என்று பல விதமான எதிரிகள் துரத்துகிறார்கள். சிங்கத்தை போலவும், புலியை போலவும் இந்த தீய குணங்கள், பிறவி என்ற காட்டில் திரியும் ஆன்மாவை துன்புறுத்துகிறது. ஜீவாத்மாவை துரத்தும் இந்த தீய குணங்கள் என்ற காட்டு விலங்குகளை வேட்டையாடும், வேடுவச்சியாக இருக்கும் வராஹி தேவிக்கு கிராத வாராஹி என்று பெயர். இவள் கோரமான வடிவம் கொண்டவள். கையில் பாசம், உலக்கை, வாள் போன்றவை கொண்டவள். சாதகனின் எதிரிகளை இல்லாமல் செய்வதில் வல்லவள். இவளது மந்திரத்திற்கு ரிஷி, “காலாக்னி ருத்திரர்’’ ஆவார். இந்த தேவியின் மந்திரம் பிருஹதி சந்தஸ்ஸில் அமைந்திருக்கிறது.

அத்வைத ஞானம் அருளும் திரஸ்கரிணிவராஹி

“திரஸ்கரிணி’’ என்றால் திரை என்று பொருள். இந்த உலகம் எங்கும் அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்க மர நிறைந்திருக்கிறார், இறைவன். ஆனால், நம்முடைய மானிட கண்களுக்கு இறைவன் தெரிவது இல்லை. காடு, மலை, செடி, கொடி, போன்ற தோற்றங்கள்தான் தெரிகிறதே ஒழிய, இறைவன் தெரிவது இல்லை. இதற்கு காரணம், எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் இறைவனை ஒரு திரை மறைந்திருக்கிறது. அந்த திரைதான் இப்படி காடு, மலை, செடி, கொடியாக தோற்றங்களை நமக்கு காட்டுகிறது. இறைவனை மறைக்கிறது.

இப்படி இறைவனை மறைத்து, உலக நாடகத்தை நடத்துபவள்தான் இந்த திராஸ்கரிணிதேவி. காடு, செடி, கொடி போன்ற மாய தோற்றங்கள் தெரிவதால் தானே பிரபஞ்சம் இயங்குகிறது. அனைவரது கண்களுக்கும் இறைவன் மட்டும் தெரிந்தால், அனைவரும் ஞானியாகி யோகத்தில் அமர்ந்து விடுவார்கள் இல்லையா? பிறகு எப்படி உலகம் இயங்கும்.

இப்படி மாயை என்ற திரையை போட்டு உலகத்தை நடத்துவதால், இந்த அம்பிகைக்கு திரஸ்கரிணி என்று பெயர். அதனாலேயே, இந்த அம்பிகையின் மூல மந்திரம், இவளை “மகா மாயை’’ என்று அழைக்கிறது. எப்படி முடிச்சை போட்டவனாலேயே அந்த முடிச்சை அவிழ்க்க முடியுமோ, அது போல உலகம் முழுவதும் பரவி இருக்கும் இறைவனை மறைத்து, திரஸ்கரிணி தேவி போட்ட மாயை என்ற திரையையும் அவளாலேயே விலக்க முடியும்.

ஆகவே, காணும் இடமெல்லாம் இறைவனை காணும் அத்வைத ஞானம் சித்திக்க வேண்டும் என்று ஞானிகளும், சித்தர்களும், முனிவர்களும் திரஸ்கரிணி தேவியை வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதாவது இவளது அருளால் பிரம்ம ஞானம் சித்திக்கும் என்பது கருத்து. அதுமட்டுமில்லாமல், ஒரு சாதகன் சித்தி அடையும் போது, அவனது சித்திகளை கண்டு பலர் பொறாமை கொண்டு தீங்குகள் செய்ய வாய்ப்புண்டு.

ஆகவே, ஆன்மிகத்தில் முன்னேறும் சாதகன், இந்த தேவியை ஜெபித்து, தனது சித்திகளை உலகின் கண்களுக்கு தெரியாமல் மறைத்துக் கொள்கிறான். இந்த திரஸ்கரிணி வாராஹிக்கு பின்னே பெரும் தத்துவம் இருக்கிறது. விரிவுக்கு அஞ்சி இங்கு வழங்கப்படவில்லை. இந்த தேவியின் மந்திரத்தின் ரிஷி பிரம்மா ஆவார். இந்த தேவியின் மந்திரம் காயத்ரி சந்தஸ்ஸில் இருக்கிறது. “ஐம்’’ பீஜம். திரஸ்கரிணி தேவி இந்த மந்திரத்தின் தேவதை.

கனவில் வந்து வழி காட்டும் ஸ்வப்னவாராஹி

இந்த தேவி, கனவிற்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரையின் மீது இவள் பவனி வருகிறாள். சூரியன், சந்திரன் மற்றும் அக்னியை கண்களாக உடையவள். வராஹ முகம் தாங்கி தனது கொம்பில் பூமியை தாங்கும் மகாசக்தியுடையவள். கைகளில் பாசம் அங்குசம், கத்தி கேடயம் போன்றவற்றை தாங்கிக் கொண்டு இருக்கும் தேவி இவள். தனது சாதகனின் கனவில் தோன்றி, நல்லதையும் கெட்டதையும் முன்னமே சொல்லி, சாதகனுக்கு வழிகாட்டும் அற்புதமான தேவி இவள்.

எளிமையான லகுவாராஹி

உன்மத்த பைரவரின் துணைவியாக கருதப்படுபவள், இந்த தேவி. பூமியை, ஹிரன்யாட்சன் என்ற அரக்கனிடம் இருந்து மீட்ட, திருமாலின் அவதாரமான வராஹ அவதாரத்தின் சக்தியாவாள் இந்த தேவி. பராசக்தி, மகாசரஸ்வதியாக அவதரித்து, சும்ப நிசும்பர்களை வதைத்த போது, அவளுக்கு உதவியவள் இந்த வாராஹி. பராசக்தி, லலிதா தேவியாக பண்டாசுரனுடன் போர் புரிந்த போது, அவளுக்கு உதவி செய்த இந்த தேவி, மலாடாசுரனை வதம் செய்தாள். காசியின் ஒரு காவல் தெய்வமாகவும் கருதப்படுபவள் இந்த தேவி. இன்றும் இந்த தேவியை, காசியில் பாதாள வாராஹி கோயிலில் தரிசிக்கலாம். இந்த தேவி அதி உக்கிரமாக இருப்பதால், பக்தர்களான நாம், அவளது பாதத்தை மட்டுமே தரிசிக்க முடியும். “லகு’’ என்றால் எளிமை என்று பொருள். பக்தர்களால் எளிமையாக அடையப்படுபவள் இந்த தேவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாராஹிகள் பலப்பல

இன்னமும் பல வாராஹியின் உருவங்களை வாராஹி தந்திரம் என்னும் நூல் நமக்கு சொல்கிறது. ஒன்றாய் விளங்கும் அம்பிகை, பலவாக விரிந்து, இவ்வுலகெங்கும் நிறைந்து நின்று, உலகை காக்கிறாள். அக்னி வாராஹி, ம்ருத்யு உச்சாடன வாராஹி, பிருஹத் வாராஹி, வார்த்தாளி வாராஹி, மகாவாராஹி என்று பல வடிவங்களை நாம் காண முடிகிறது.

ஒவ்வொரு வடிவமும், அதிக பலமும், அதிக அருளும் கொண்டவை. இந்த வடிவங்களின் மகிமையை அறிந்து கொள்ள இந்த ஜென்மம் போதாது என்பது மிகையல்ல. இவை அனைத்தையும் ஒரு தேர்ந்த குருவிடம் உபதேசமாக பெறுவதே தகும். குருவில்லாத எந்த வித்தையும் வீண். குருவில்லாத வித்தை பலிக்கவும் செய்யாது.ஆகவே, மந்திர சாஸ்திரங்களில் ரகசியமாக சொல்லப்பட்ட இந்த ரூபங்களை குரு மூலமாக உணர்ந்து, தெரிந்து பூஜிப்பதே முறை. அது முடியாதவர்கள், உள்ளம் நிறைந்த அன்போடு, வாராஹி அம்பிகையை மனமார சரணடைந்தலே, அம்பிகை வேண்டும் வரம் தருவாள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

ஜி.மகேஷ்

The post வாழ்வில் அனைத்தும் கிடைக்க வாராஹி appeared first on Dinakaran.

Read Entire Article