நவ துர்கையில் நான்காவது துர்கையாக விளங்கும் தேவி தான் கூஷ்மாண்டா தேவி. இந்த தேவி தன்னுடைய குளுமையான புன் சிரிப்பினால் உலகங்கள் அனைத்தையும் ஈன்று எடுப்பதால், இந்த அம்பிகைக்கு கூஷ்மாண்டா தேவி என்று திருநாமம். கூஷ் என்றால் புன்சிரிப்பு. அண்டம் என்றால் உலகம். தன்னுடைய மந்த ஹாசத்தால் அகிலத்தையே வாழவைக்கும் இந்த தேவியின் மகிமையை காண்போம் வாருங்கள்.
உலகின் துவக்கமும் கூஷ்மாண்டா தேவியும்
படைப்பின் துவக்கத்தில், எந்த ஒரு பொருளும் இல்லை. நிர்மலமான, பரம்பொருளின் வடிவில் இந்த கூஷ்மாண்டா தேவி மட்டுமே இருந்தார்கள். இந்த அம்பிகை தன் மென் சிரிப்பை செய்து உலகைப் படைத்தாள். கணத்தில் அண்ட சராசரமும் தோன்றியது. பூ லோகம், புவர் லோகம், சுவர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், மகர் லோகம், சத்திய லோகம் முதலிய மேல் ஏழு லோகங்களும், அதல லோகம், விதல லோகம், சுதல லோகம், தலாதல லோகம், ரசாதல லோகம், மஹாதல லோகம், பாதாள லோகம் முதலிய கீழ் ஏழு லோகங்களும், பூ லோகமும் தோன்றியது. இதையே அபிராமி பட்டர் ‘‘இரு நாழிகை போதும் வேண்டாது நிமிடத்தில் இவ்வகில புவனத்தையும் இயக்கி அருளும் திறம் கொண்ட நீ’’ என்று சொல்கிறார்.
இதையே லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் முதல் நாமமான ‘‘ஸ்ரீ மாதா’’ என்ற நாமமும், ‘‘ஆபிரம்ம கீட ஜனனி’’ என்ற நாமமும் சொல்கிறது. ஸ்ரீ மாதா என்றால், மேன்மை தங்கிய தாய் என்று பொருள். போலவே, பிரம்மன் முதலிய தேவர்களையும், புல் பூண்டு முதலிய சாதாரண ஜீவன் களையும் ஈன்றவள் என்பது மேலே நாம் கண்ட மற்றொரு நாமாவின் பொருள்.
சூரியன் மத்தியில் வீற்றிருக்கும் தேவி
இந்த தேவி, சூரிய மண்டலத்தின் மத்தியில் வசிப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. இதையே லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ‘‘பானு மண்டல மத்யஸ்தா’’ என்ற நாமம் குறிக்கிறது. அம்பிகையின் தேகத்தில் இருந்து வெளிப்படும் காந்தி, அந்த சூரியனையே மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள். இந்த தேவியின் உடலில் இருந்து கிளம்பும் காந்திக்கு, இந்த தேவியின் காந்தியையே உவமையாக சொல்ல முடியும். வேறு மற்ற தேவதைகளின் காந்தி அல்லது தேஜஸ், இந்த அம்பிகையின் முன் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும்.
இந்த தேவியின் திருமேனியில் இருந்து கிளம்பும் ஒளியே, திசைகளை திசைகளாக பிரகாசிக்க செய்கிறது. உலகில் இருக்கும் மற்ற எந்த வஸ்துவின் காந்தியும் தேஜஸ்சும் இந்த அம்பிகையின் காந்தியின் ஒரு பகுதியாகவே கருதப் படுகிறது. இப்படி உலகையே தூண்டும் ஞான ஒளியாக சூரியனின் மத்தியில் கூஷ்மாண்டா தேவி ஒளிர்வதால், நான்கு வேதங்களின் சாரமாக திகழும் காயத்ரி மந்திரம் இந்த அம்பிகையையே துதிக்கிறது என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் காயத்ரி என்ற நாமமும் இதே கருத்தை கொண்டது ஆகும்.
நவ கிரங்கங்களும் கூஷ்மாண்டா தேவியும்
இந்த துர்கை நவகிரகங்களில் சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் அதி தேவதையாக விளங்குகிறாள். சூரியன், அரசு சம்பந்தமான உபகாரங்கள், கண், ஆளுமைத் திறன் போன்றவற்றைத் தருகிறார். அதே சமயம் சுக்கிரன் அனைத்து விதமான போகங் களையும் தருகிறார். இந்த தேவியை வணங்க, ஜாதகத்தில் சூரியனாலும் சுக்ரனாலும் ஏற்படும் தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நன்மையும் உண்டாகும்.
கூஷ்மாண்டா தேவியின் தோற்றம்
இந்த தேவி எட்டு கரங்களோடு காட்சி தருகிறாள். எனவே, இந்த தேவியை அஷ்டபுஜா தேவி என்றும் அஷ்டபுஜ துர்க்கை என்றும் அழைக்கிறார்கள். தனது ஏழு கரங்களில் முறையே கமண்டலு, வில், அம்பு, தாமரை மலர், தேன் நிறைந்த பானை, சக்கரம் மற்றும் சூலாயுதம் தாங்கி இருக்கிறாள் இந்த தேவி. எட்டாவது கையில் ஜெபமாலை உள்ளது. இது அம்பிகையை பூஜிக்கும் சாதகனுக்கு, அனைத்து செல்வத்தையும், ஞானத்தையும், மோட்சத்தையும் அளிக்கிறது. இந்த அம்பிகை சிம்ம வாகனத்தில் பவனி வருவதாக சாஸ்திரங்கள் சொல்கிறது.
கூஷ்மாண்டா தேவியும் பூசணிக்காயும்
சமஸ்கிருத மொழியில் கூஷ்மாண்டம் என்றால் பூசணிக்காய் என்று ஒரு பொருள் உண்டு. அந்த வகையில் இந்த தேவியின் பூஜையில் பூசணிக்காய் பலி தரப்படுகிறது. இந்த தேவி பூசணிக்காய் பலியில் மிகுந்த பிரீதி உடையவள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.
குண்டலினி யோகமும் கூஷ்மாண்டா தேவியும்
யோக சாஸ்திரம் நமது உடலில் சூட்சுமமான யோகா சக்கரங்கள், இடைகலை பிங்கலை நாடிக்கு நடுவே சூட்சுமமாக இருக்கிறது என்று சொல்கிறது. அந்த வகையில், நான்காவது யோகசக்ரமான அனாகத சக்கரத்தில் இந்த தேவி வசிப்பதாக யோக சாஸ்திரங்கள் சொல்கிறது.இந்த சக்கரம் வாயு தத்துவத்தை குறிக்கிறது. காற்றே உயிர்களின் மூச்சில் இருந்து அனைத்தையும் உயிர் வாழ வைக்கிறது. அந்த வகையில், அனைத்து உலகையும் படைத்த இந்த தேவியை அனாகத சக்கரத்தில் வைத்து வழிபடுவதும் சிறந்ததுதான்.
சிவ தாண்டவமும் கூஷ்மாண்டா துர்கையும்
பகலும், இரவும் சந்திக்கும், பிரதோஷ வேளையில் சிவனார் ஆடும் தாண்டவம் சந்தியா தாண்டவம். அந்த தாண்டவம் ஆடும் சமயம், ஈசன் தனது இடக்கால் விரலால் ஸப்த ஒலிக்
கோலம் வரைந்தார். இந்த கோலத்தில் இருந்து கூஷ்மாண்டா தேவி தோன்றியதாக சைவ ஆகம நூல்கள் சொல்கின்றன.
கூஷ்மாண்டா தேவியின் உபாசகன்
நவராத்திரி வழிபாட்டின் நான்காவது நாளில், கூஷ்மாண்டா தேவியின் வடிவம் வழிபடப்படுகிறது. எனவே, இந்நாளில், கூஷ்மாண்டா தேவியின் வடிவத்தை மனதில் வைத்து, மிகவும் தூய்மையான மற்றும் கலங்காத மனதுடன் வழிபாட்டில் ஈடுபட வேண்டும். கூஷ்மாண்டா தேவியை வழிபடுவதால், பக்தர்களின் அனைத்து நோய்களும்,
துக்கங்களும் நீங்குகின்றன.
அம்பிகையின் மீது அந்த உபாசகர் கொண்ட பக்தி, உபாசகனின் ஆயுட்காலம், புகழ், வலிமை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கூஷ்மாண்டா தேவி மிகவும், எளிமையான பக்தி மற்றும் பூஜையாலேயே மகிழ்ச்சி அடைகிறாள். ஆகவே அம்பிகையின் அருளைப் பெற பெரிய யாகங்களையும் பூஜைகளையும் செய்ய வேண்டும் என்று இல்லை. உள்ளன்போடு அம்பிகையை பூரணமாக சரணடைந்தாலே அனைத்து விதமான அருளையும் பெறலாம்.
ஒரு நபர் உண்மையான, மற்றும் தூய்மையான இதயத்துடன் இந்த தேவியிடம் அடைக்கலம் புகுந்தால், அவர் வெகு எளிமையாக இகபர சௌபாக்கியங்களை அடையலாம் என்று சாஸ்திரங்கள்
அறுதியிட்டுச் சொல்கிறது.சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ள படி கூஷ்மாண்டா துர்கா தேவியை வழிபட வேண்டும். மேலும் பக்தியின் பாதையில் சாதகன் விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும். அப்படி ஒரு பக்தன், அம்பிகையை நோக்கிய பக்திப் பாதையில் சில படிகள் முன்னேறியதும், அம்பிகையின் நுட்பமான, அதிசயமான அருளை அனுபவிக்கத் தொடங்குகிறான்.
துக்கம் நிறைந்த இவ்வுலகம் அவனுக்கு மிகவும் இன்பமாகவும் எளிதாகவும் அமைகிறது. பாரதியார், ‘‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்’’ என்று, அன்னியர்களால் பல துன்பங்களை அனுபவித்த போதும், பாடியது இதற்கு ஒரு நல்ல சான்றாகும்.ஒரு மனிதன், பிறவிப் பெருங் கடலை எளிதாகக் கடக்க இந்த தேவியின் வழிபாடு எளிதான மற்றும் சிறந்த வழியாகும். கூஷ்மாண்டா தேவியின் வழிபாடு மனிதனை நோய்களிலிருந்து முற்றிலும் விடுவித்து மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
தியான ஸ்லோகமும் அதன் பொருளும்
சுரா பூர்ண கலசம், ருதிரா லுப்த மேவச
ததானா ஹஸ்த பத்மாப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே
(பொருள்: ரத்தக்கறை படிந்த குடத்தில் தேனை ஏந்தி இருக்கும் கூஷ்மாண்டா தேவி எனக்கு அனைத்து விதமான சௌபாக்கியங்களையும் அருளட்டும். இங்கு ரத்தக்கறை படிந்த குடம் என்பது, இரத்தத்தாலும் சதையாலும் ஆன நமது உடலைக் குறிக்கிறது. குடத்தில் இருக்கும் மது அல்லது தேன், இந்த உடலுக்குள் ஆனந்தமே வடிவாக இருக்கும் ஆன்மாவை குறிக்கிறது.
மொத்தத்தில் இந்த தேவியை வணங்க எளிதாக ஆத்ம ஞானம் சித்திக்கும் என்பது கருத்து. மேலும் உலகுக்கே உயிரை கொடுத்தவள் கையில், உலக உயிர்களைக் குறிக்கும் ஒரு மதுக் குடம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் கொள்ளலாம். அதாவது தன்னை அண்டிய உயிர்களை, கண்ணை இமை காப்பது போல, இந்த தேவி காக்கிறாள் என்றும் இது உணர்த்துகிறது) என்ற தியான ஸ்லோகம் சொல்லி அம்பிகையை வழிபடுபவர்கள், அனைத்து வித சௌபாக்கியத்தையும் பெறுகிறார்கள் என்பது கண்கூடு.
ஜி.மகேஷ்
The post வாழவைப்பாள் கூஷ்மாண்டா தேவி appeared first on Dinakaran.