வாழப்பாடி: வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில், நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டியதில் 30 வீரர்கள் காயமடைந்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர் சிவலிங்கம் ஆகியோர், கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். சேலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வீரமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, வட்டார கால்நடை மருத்துவர் முருகன், மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம், ஆத்தூர், கொல்லிமலை, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து 600 காளைகள் கலந்து கொண்டன. பல்வேறு பகுதிகளில் இருந்து 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், வாடிவாசல் வழியாக கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து, ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். சில காளைகள், வீரர்களுக்கு போக்கு காட்டி களத்தில் விளையாடியது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், வெள்ளி நாணயம், ரொக்கம், பேன், மிக்சி, குக்கர், பாத்திரம், பனியன் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியின் போது, மாடுகள் முட்டியதில் 30 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் வாழப்பாடி மருத்துவமனையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த போட்டியில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன், வாழப்பாடி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டு, பரிசு பொருட்கள் வழங்கினர். இதே போல் விழாக்குழுவினர், பாமக சிவா, ராஜமூர்த்தி உள்ளிட்ட பலர் பரிசு பொருட்கள் வழங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்ததால், சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல் தலைமையில், ஏடிஎஸ்பி சோமசுந்தரம், வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் உள்ளிட்ட 3 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் கொண்ட போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்: மாடுகள் முட்டியதில் 30 பேர் காயம் appeared first on Dinakaran.