ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை கிருஷ்ணா கால்வாய் முதல் கண்ணன் கோட்டை புதிய நீர்த்தேக்கம் வரை அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்வாய், மழையால் சிமென்ட் சிலாப்புகள் உடைந்து சேதமடைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை கிராமங்களை இணைத்து அதிமுக ஆட்சியில் ரூ.330 கோடி செலவில் கண்ணன்கோட்டை என்ற பெயரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க முடிவு செய்தது. இதற்காக கடந்த 2014ம் ஆண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் விவசாய நிலங்களை அழித்து பணிகள் தொடங்கியது. அந்த பணிகள், பல பிரச்னைகளுக்கு இடையே நிறைவடைந்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் தாமரைக்குப்பம் பகுதியிலிருந்து, திருப்பி விடப்பட்டு கரடி புத்தூர் வழியாக கால்வாய் மூலம் கண்ணன் கோட்டை நீர்தேக்கத்திற்கு செல்லும்.
கடந்த 4 வருடத்திற்கு முன்பு நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால் தாமரைக்குப்பம்-கண்ணன் கோட்டை இடையில் செஞ்சியகரம் பகுதியில் அமைக்கப்பட்ட கால்வாய் சிமென்ட் சிலாப்புகள் உடைந்து சேதமடைந்தது. மேலும் கால்வாயின் கரையோரத்தில் மண் சரிந்து கால்வாய் தூர்ந்து விட்டது. அந்த கால்வாயில் மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் அந்த கால்வாயின் நுழைவு பகுதியில் தண்ணீர் நிரம்பி தேங்கி நிற்கிறது. அது மட்டுமல்லாமல், கரைகளும் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் பகுதியில் இருந்து கண்ணன் கோட்டைக்கு செல்லும் வழியில் தாமரைக்குப்பம் பகுதியில் கடந்த நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால் சிமெண்ட் கால்வாய் சேதமடைந்து விட்டது. செஞ்சியகரம் பகுதியில் கரையோர மண் சரிந்து பெரிய கால்வாயே தூர்ந்து விட்டது.
இந்த கால்வாய் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் தரமற்ற முறையில் உள்ளது. இதனால் தாமரைக்குப்பத்தில் இருந்து செஞ்சியகரம் வரை மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.
The post கிருஷ்ணா கால்வாய் முதல் கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம் வரை சிமென்ட் சிலாப்புகள் சேதம்: சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.