சென்னை,
சிவகங்கையில் இன்று (22.01.2025) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக, சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் திரு உருவச்சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை முன்னிட்டு, நகரம்பட்டியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நிறுவப்பட்டுள்ள வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் திரு உருவச்சிலைக்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றிடும் வகையிலும், அவர்களை கவுரவிக்கும் பொருட்டும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில், சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்களிப்பையும், தியாகத்தையும் முழுமையாக அளித்த சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழை உலகிற்கு பறைசாற்றுகின்ற வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் தன் பொன்மொழிகளால் வரலாற்று சிறப்புக்களை நூல்களாக பொறித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியினை நடத்திக்கொண்டிருக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழிற்கு வலுச்சேர்க்கின்ற வகையில், அன்னாரது பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடிட உத்தரவிட்டதன் அடிப்படையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னாரது பிறந்தநாள், அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு சிறப்பு சேர்த்திடும் வகையில், அன்னாருக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகரம்பட்டியில் திருஉருவச்சிலை அமைக்கப்பதற்கென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 22.01.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டு, அப்பணிகள் இனிதே நிறைவுற்று, வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் திருவுருவச்சிலை இன்றையதினம் வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்திலேயே நேரில் வருகை புரிந்து கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மொழி, இனம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கென பாடுபட்டவர்களை கௌரவிக்கின்ற வகையிலும், அவர்களின் புகழை போற்றுகின்ற வகையிலும், அவர்களுக்கு நினைவகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் திருவுருவச்சிலைகள் ஆகியவைகளை அமைத்து, எதிர்கால சந்ததியினர்கள் அறிந்து கொள்கின்ற வகையில், சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.