புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில், மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பட்னேரா ரெயில் நிலையம் அருகே ரெயில் இன்று மாலை வந்தபோது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. உடனடியாக அங்கிருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ரெயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், அந்த ரெயிலில் இருந்து மற்ற பயணிகள் அவசர அவசரமாக இறங்கியுள்ளனர். அவர்கள் அருகே இருந்த தண்டவாளத்தில் உடைமைகளுடன் நின்றிருந்த நிலையில், எதிர்திசையில் அதிவேகமாக வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்தவர்கள் மீது மோதியது.
இதில் 11 பேர் சம்பவ இடத்தியே உடல் துண்டாகியும், தூக்கி வீசப்பட்டும் பலியானதாக மத்திய ரெயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்வப்னில் நிலா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. "புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள 'ஹாட் ஆக்சில்' அல்லது 'பிரேக்-பைண்டிங்' (ஜாமிங்) காரணமாக தீப்பொறிகள் ஏற்பட்டதாக ரெயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த துயர சம்பவத்தை அடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உள்துறை மந்திரி அமித் ஷா, மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரியோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்தநிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் ,மராட்டியம், ஜல்கானில் ரெயில் மோதி 11 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.