பனாஜி,
கோவா மாநிலத்தின் வாஸ்கோ நகரில் வளைவு பகுதியில் கட்டப்பட்ட நாட்டின் முதல் கேபிள் பாலத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி திறந்து வைத்தார். அதோடு 4 தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:-
கோவாவில் சில அரசு அதிகாரிகளின் ஆக்கிரமிப்புகளால் தேசிய நெடுஞ்சாலைகளின் அகலம் குறைந்து வருவதை நான் அறிவேன். இந்த விவகாரத்தை அவசரமாக பரிசீலிக்குமாறு முதல்-மந்திரி மற்றும் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
தேவைப்பட்டால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்குவோம். அதன் பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், புல்டோசர்களை வைத்து அவற்றை அப்புறப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.