வால்பாறை நகரில் சுகாதாரம் பேண பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வலியுறுத்தல்

3 months ago 19

வால்பாறை : வால்பாறை டவுனில் நகராட்சி அறிவுறுத்தியும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காத நிலையில், தூய்மை பணியாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.குடியிருப்புகள் பகுதியில் குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கும் அவலம் எற்பட்டுள்ள நிலையில், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. “தூய்மை வால்பாறை” என்ற கருத்தை மையமாக வைத்து வால்பாறையில் குப்பை களற்ற நகரமாக மேம்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நாள்தோறும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பலமுறை நகராட்சி சார்பில் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என எவ்வாறு தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சியும் நடைபெற்று உள்ளது.

இருப்பினும் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது இல்லை. இதை தவிர்க்க நகராட்சி போதிய நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இந்நிலையில் தூய்மை பணியாளர் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மக்கும் குப்பை:உணவுக்கழிவுகள்,காய்கறிகள்,பயன்படுத்திய தேயிலைத்தூள்,உணவுக் கழிவுகள், இறைச்சி எலும்புகள், உலர்ந்த இலைகள்,சருகுகள், வீட்டு தூசி மற்றும் சாம்பல் முதலானவை.
மக்காத குப்பைகள் : பிளாஸ்டிக், கண்ணாடி, மரச்சாமன்கள், பர்னிச்சர்கள், ரப்பர், பழைய பேப்பர்கள், உலோக பொருட்கள்.

அபாயகரமான குப்பைகள்: மருத்துவக் கழிவுகள், மருந்து பாட்டில்கள், ஊசிகள், எண்ணெய் கேன்கள், டின்கள், பசைகள், வண்ணப்பூச்சுகள், சுத்தம் செய்யும் திரவ பாட்டில்கள், பேட்டரிகள், பல்புகள், கம்பிகள், பி.வி.சி பொம்மைகள் முதலானவை.வீடுகளில் இரண்டு குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும்.ஒரு தொட்டியில் மக்கும் குப்பை மற்றும் மற்றொரு தொட்டியில் மக்காத குப்பைகள் அளிக்க வேண்டும்.மருத்துவக் கழிவுகளை மஞ்சள் பைகளில் தனியாக சேகரித்து வைக்க வேண்டும்.

ஒரு தொட்டியை பயன்படுத்தினால் தூய்மைப் பணியாளர்களிடம் அளிக்கும்போது மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து இரண்டு கவர்களில் அளிக்க வேண்டும். தேங்காய் மூடி மற்றும் மஞ்சு தற்போது வீடுகளில் இருந்து பிரித்து கொடுத்தல் நலமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.இவ்வாறு குப்பைகளை பிரித்து கொடுத்து, குப்பையில்லா நகராட்சியாக டவுன் பகுதி மாறவேண்டும், வால்பாறை டவுன் குடியிருப்புவாசிகள் குப்பைகளை பிரித்து கொடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

நீர் நாய்கள் அழியும் நிலை

நகராட்சி குப்பைகளை சேகரிக்கும் நிலையில், வால்பாறை டவுனில் குப்பைகளை ஆற்றில் கொட்டும் பழக்கம் உள்ளது.இந்நிலையில் வாழைத்தோட்டம் ஆறு, காமராஜ் நகர் பகுதியில் ஓடும் சிற்றோடை, கக்கன் காலனி சிற்றோடைகளில் குப்பைகள் அடித்துச் செல்லப்படுகிறது.இந்நிலையில் வால்பாறை படகு இல்லத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.பொதுமக்கள் உணர்ந்து படகு இல்லத்தை பராமரிக்க உதவ வேண்டும் என்றும், மீன்கள் மற்றும் நீர் நாய்கள் உள்ள படகு இல்லம் பகுதியில்,குப்பைகளால் அவை அழியும் நிலை உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

The post வால்பாறை நகரில் சுகாதாரம் பேண பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article