
கோவை,:
கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் உள்ளது. இந்த பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் ஊருக்குள் புகுந்து வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை அருகே இடதுகரை குடியிருப்பு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று உலவி வந்தது. அந்த யானையானது அங்கிருந்த மூதாட்டி ஒருவரை தாக்கியது. இதில் மேரியம்மாள் (60) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்த மற்றொரு மூதாட்டி, தப்பி ஓடும் போது காயமடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். யானை தாக்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.