பொத்தனூர் வெங்கமேடு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா

4 hours ago 2

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் அருகே வெங்கமேடு பெரியார் நகரில் உள்ள சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா கடந்த 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மறுக்காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.

19-ம் தேதி திங்கட்கிழமை வெங்கமேடு பெரியார் நகர் பகுதியைச் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் வடிசோறு படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பொத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுடன் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன்முன் படையல் போட்டு பொங்கல் பூஜையும், மாவிளக்குகளை கொண்டு வந்து அம்மன் வளாகத்தில் வைத்து மாவிளக்கு பூஜையும் செய்தனர்.

முன்னதாக மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Read Entire Article