வாலிபர் பலியானதால் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் கலசபாக்கம் அருகே பரபரப்பு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில்

2 months ago 12

கலசபாக்கம், அக்.4: கலசபாக்கம் அருகே தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பரிதாபமாக பலியானதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இளங்கோ(30), திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் மாயமான இளங்கோ உடலில் பலத்த தீக்காயங்களுடன் 29ம் தேதி தேவனாம்பட்டு திருவண்ணாமலை செல்லும் வனப்பகுதியில் சாலையோரம் மயங்கி கிடந்தார். தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் விரைந்து வந்து இளங்கோவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி இளங்கோ பரிதாபமாக இறந்தார். முன்விரோதம் ஏதேனும் இருந்து யாரேனும் தீவைத்து கொல்ல முயற்சி செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தேவனாம்பட்டு கிராமத்தில் இளங்கோவின் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது செய்து இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

The post வாலிபர் பலியானதால் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் கலசபாக்கம் அருகே பரபரப்பு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் appeared first on Dinakaran.

Read Entire Article