திருவண்ணாமலை: பைனான்ஸ் தொழிலுக்கு இடையூறாக இருந்ததால் இ-சேவை மைய வாலிபரை கொலை செய்ததாக கைதான பைனான்சியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் மதுரா சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). இ-சேவை மையம் நடத்தி வந்தார். இவர் கடந்த 28ம்தேதி நள்ளிரவு தனது வீட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்த பைனான்சியர் சுரேஷ்(44) என்பவருக்கும், கார்த்திகேயனுக்கும் முன்விரோதம் இருந்ததும், இதனால் சுரேஷ் திட்டமிட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று சுரேஷ், அவரது மனைவி லலிதா, இவர்களது வீட்டில் வேலைசெய்யும் அபிமா(23), விக்கி (எ) விக்னேஷ்(24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைதான சுரேஷ் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: பைனான்சியர் சுரேசும், கார்த்திகேயனும் நண்பர்கள். பின்னர் அவர்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஓராண்டுக்கு முன் சிறுநாத்தூர் பஸ் நிறுத்தத்தில் இருவரும் தாக்கிக்கொண்டனர். இதற்கிடையில் சுரேஷ் சிறுநாத்தூரில் வீடு கட்டியுள்ளார். அப்போது வீட்டின் முன்புறம் உள்ள பொது வழியை சில அடி தூரம் ஆக்கிரமித்து கட்டியதாக கூறப்படுகிறது. இதையறிந்த அதிகாரிகள் வந்து ஆக்கிரமிப்பை இடித்து அகற்றியுள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு கார்த்திகேயன்தான் காரணம் என சுரேஷ் நினைத்துள்ளார். மேலும் சுரேஷிடம் வட்டிக்கு பணத்தை வாங்கியவர்களை, கார்த்திகேயன் சந்தித்து, அதிக வட்டிக்கு பணம் வாங்கி விட்டீர்கள், மெதுவாக திருப்பி செலுத்துங்கள்’ எனக்கூறினாராம்.
இதுபோன்ற சம்பவங்களால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், கார்த்திகேயனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து சுரேஷ், அவரது மனைவி லலிதா, அபிமா, விக்கி(எ) விக்னேஷ், சுரேஷின் மைத்துனர் ரமேஷ், ஆகாஷ் ஆகியோர் சேர்ந்து, கார்த்திகேயன் வீட்டிற்கு சம்பவத்தன்று சென்று அவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதற்கிடையில் போலீசார் தேடுவதையறிந்த சுரேஷ், லலிதா, அபிமா ஆகிய 3 பேரும் கீழ்பென்னாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைய நேற்று வந்தனர். இதையறிந்த போலீசார் நீதிமன்றத்தில் தயாராக இருந்தனர். அப்போது காரில் வேகமாக வந்த சுரேஷ் அங்கிருந்த 2 பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு உள்ளே வந்து காரை நிறுத்தியுள்ளார். பின்னர் 3 பேரும் போலீசாரிடம் சிக்காமல் நீதிமன்றத்தில் நுழைய முயன்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் 3 பேரையும் பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் இக்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரமேஷ், ஆகாஷ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
The post வாலிபர் கொலை வழக்கு; தொழிலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றோம்: பைனான்சியர் வாக்குமூலம் appeared first on Dinakaran.