வாலாஜாபாத் பேரூராட்சியில் நோய் பாதித்த நாய்களால் பொதுமக்கள் அச்சம்

6 hours ago 4


வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நோய் பாதித்த நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வாலாஜாபாத் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காகவும் வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரங்களில் வாகனங்களில் வீடு திரும்பும் தொழிலாளர்களை விரட்டி செல்கிறது. வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் தினமும் 20க்கும் மேற்பட்டோர் நாய்கடி சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். நோய் பாதித்த தெருநாய்களை பிடிக்கக்கோரி பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தெருவில் 15 நாய்கள் வரை சுற்றித்திரிகின்றன. மேலும், இதில் ஒருசில நாய்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு சுற்றித்திரிகிறது. இதனால், மற்ற நாய்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, நோய் பாதித்த தெருநாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post வாலாஜாபாத் பேரூராட்சியில் நோய் பாதித்த நாய்களால் பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article