சென்னை : தென் தமிழ்நாட்டில் ஆழ்கடல் பரப்பில் எரிவாயு எடுக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கன்னியாகுமரி அடுத்த ஆழ்கடல் பகுதியில் 2 இடங்களிலும், சென்னை அருகே ஓரிடத்திலும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க, ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 32,484 சதுர கி.மீ., பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் ஆழ்கடல் பரப்பில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தின் மீது பேசிய அவர், “ஆழ்கடல் எரிவாயு திட்டத்தால் குமரி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல் வளம் பாதிக்கப்படும். நச்சுத் தன்மை வாய்ந்த மீன்களை மக்கள் சாப்பிடும் நிலை ஏற்படும். எனவே ஆழ்கடல் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழக அரசு தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார். ஏற்கனவே ஆழ்கடல் எரிவாயு திட்டத்தை அறிவித்த போதே, தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. நேற்றைய தினம் திட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
The post “நச்சுத் தன்மை வாய்ந்த மீன்களை சாப்பிடும் நிலை ஏற்படும்”.. தமிழ்நாட்டில் ஆழ்கடலில் எரிவாயு எடுக்க காங்கிரஸ் எதிர்ப்பு appeared first on Dinakaran.