*ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வாலாஜா : வாலாஜா ஏகாம்பரநாதர் கோயில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.வாலாஜாவில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர், நாள்தோறும் காலையில் ஈஸ்வரனுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்து வருகிறது. இரவு பல்வேறு அலங்காரத்துடன் சுவாமியும், அம்பாளும் வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.
தொடர்ந்து, 7ம் நாளான நேற்று காலை தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் பல்வேறு யாகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டாடை அணிந்து அலங்கரிக்கப்பட்ட ஏகாம்பரநாதர், காமாட்சி அம்பாள் திருத்தேரில் அமர வைக்கப்பட்டனர். காலை 9 மணிக்கு திருத்தேர் பவனி தொடங்கியது. அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்ற திருத்தேர் நேற்று மாலை பஸ் நிலையம் அருகே வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து ஈசனை தரிசித்தனர்.
அப்போது, பக்தர்கள் உப்பு மற்றும் மிளகு தேரின் சக்கரத்தில் வைத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொண்டனர். விண்ணை முட்டும் அளவிற்கு அரோகரா மற்றும் சிவசிவ என கோஷமிட்டனர். இளைஞர்கள் வழியெங்கும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். நாதஸ்வரம், கிராமிய மேளம், சென்டைமேளம் ஆகியவை இடம் பெற்றன. மீண்டும் தேரானது கோயில் அருகே நிலைக்கு வந்தடைந்தது.
தேர்த்திருவிழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாலாஜாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ராணிப்பேட்டை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விழாவில் இன்று குதிரை வாகன உற்சவம், நாளை அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். வரும் 21ம் தேதி லட்சதீப உற்சவம் நடைபெறுகிறது.
The post வாலாஜா ஏகாம்பரநாதர் கோயிலில் தேர் திருவிழா appeared first on Dinakaran.