வார்டு தேர்தலில் கூட போட்டியிடாத அரசியல் விடலைகள் திமுகவை சவாலுக்கு இழுக்கின்றனர்: திருமாவளவன் எம்பி காட்டம்

2 days ago 2

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா நேற்று நடந்தது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசியதாவது: அரசியல் விடலைகள் திமுகவை சவாலுக்கு இழுக்கிறார்கள். திமுகவும், விசிகவும் கொள்கையால் இணைந்த கூட்டணி. உறுதியான நிலைப்பாட்டோடு இந்த கூட்டணி நிற்கிறது. எடப்பாடி அமித்ஷாவை சந்திப்பதற்கும், நடிகர் விஜய் விரக்தியில் விசிகவை விமர்சிப்பதற்கும் நமது கொள்கை உறுதிப்பாடுதான் காரணம்.

விசிகவின் கொள்கை உறுதி அவர்களை தடுமாற வைத்திருக்கிறது. இதுவரை தேர்தல் களத்திலேயே நிற்காத ஒரு கட்சியை தூண்டி விடுகிறார்கள். அடுத்து ஆட்சிக்கு வந்து விடுவதாக உசுப்பி விடுகிறார்கள். தமிழக அரசியலில் 2வது இடத்திற்குதான் அதிமுக, நடிகர் விஜய், அண்ணாமலைக்கு இடையே போட்டி நடக்கிறது. திமுக முதலிடத்தில் உள்ளது. அதை யாரும் வீழ்த்த முடியாது. வார்டு தேர்தலில் கூட நிற்காத ஒரு கட்சி சவால் விடுகிறது.

விசிக இருக்கும் வரை இந்த கூட்டணியை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. திமுக கூட்டணியை உடைக்க கூலி வாங்கிக்கொண்டு சிலர் செயல்படுகிறார்கள். பாஜகவின் நோக்கம் அதிமுகவை பிளவுபடுத்துவதுதான். எடப்பாடி பாஜகவோடு போனால் கதை முடிந்தது. 100 மோடி பிறந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது. சினிமா செட் போட்டு கிராமங்களை பார்க்கிறவர்கள், கிளிசரின் தடவிக்கொண்டு அழுகிறவர்கள் அல்ல நாங்கள். மக்களோடு களத்தில் இருப்பவர்கள். சனாதன கும்பல் வெவ்வேறு முகமூடிகளோடு வருகிறார்கள். கதாநாயகன் என்ற முகமூடியோடு இருக்கிறார்கள். எனவே, சனாதானத்தை முறியடிப்போம்.

The post வார்டு தேர்தலில் கூட போட்டியிடாத அரசியல் விடலைகள் திமுகவை சவாலுக்கு இழுக்கின்றனர்: திருமாவளவன் எம்பி காட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article