வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரோம் - மைதிலி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

3 months ago 23
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை, திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கி, 144 உயிர்களைக் காப்பாற்றிய விமானிகளில் மைதிலி என்ற பெண் பைலட்டும் ஒருவர். வானில் விமானம் வட்டமிட்டதன் அறிவியல் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு நேற்று மாலை 5:40 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. வானில் பறக்கத் தொடங்கியதும் விமானத்தின் சக்கரங்கள் உள்இழுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த விமானத்தில் முன் சக்கரம் உள்இழுத்துக் கொள்ளவில்லை. அதன் ஹைட்ராலிக் சிஸ்டம் செயலிழந்து விட்டதாக கூறப்படுகின்றது. விமானத்தின் சக்கரம் வெளியில் நீண்ட நிலையில், விமானம் வெகுதூரம் சீராக பறப்பது சவாலானது என்றும், விமானத்தின் வேகத்தை தடுப்பதுடன் நிலையற்ற பறக்கும் தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து விமானத்தை திருச்சியில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. எந்த ஒரு விமானமும் தரையிறங்கும் நேரத்தில் குறைந்த அளவிலேயே எரிபொருள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அப்போது தான் சீரான அளவில் எடை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், சார்ஜா செல்லும் காலஅளவையும் தூரத்தையும் கணக்கில் கொண்டு, விமானத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்ததால், வானத்தில் வட்டமடித்து பெட்ரோலைக் காலி செய்தால் தான் விமானம் பத்திரமாக தரையிறங்க இயலும் அல்லது பெட்ரோலை திறந்து விட வேண்டும் என்ற சூழல் உருவானது. இதையடுத்து விமானத்தை இயக்கிய விமானிகள் இக்ரோம் மற்றும் மைதிலி ஆகியோர் பாதுகாப்பான வழிமுறையாக பெட்ரோலை வட்டமடித்து காலிசெய்ய முடிவெடுத்தனர். அதன்படி சுமார் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் வானில் வட்டமடித்து எரிபொருளை போதுமான அளவு காலிசெய்த பின்னர், திருச்சி விமான நிலையத்தில் இரவு 8 மணி15 நிமிடத்துக்கு பத்திரமாக தரையிறக்கினர் பதற்றத்துடன் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த உறவினர்கள், விமானம் தரையிறங்கியதும் உற்சாக மிகுதியால் கத்திக் கூச்சலிட்டபடியே விமானிகளை பாராட்டினர். விமானம் திருச்சியில் தரையிறங்கியது என்பதே கடைசி அரைமணி நேரத்துக்கு முன்னர்தான் தெரியும் என விமானத்தில் இருந்த பயணிகள் தெரிவித்தனர். அதிகாலையில் புறப்பட்ட மாற்று விமானத்தில் பயணிகளில் பலர் சார்ஜா சென்ற நிலையில், குடும்பத்துடன் வந்திருந்த சிலர், விமானத்தில் பயணம் செல்ல விரும்பவில்லை எனக்கூறி கட்டணத்தை திரும்பக்கேட்டதாகக் கூறப்படுகின்றது. விமான சக்கரத்தில் உள்ள பழுதை ஆய்வு செய்யாமல் எப்படி விமானத்தை பறக்க அனுமதித்தனர் என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Read Entire Article