வானகரத்தில் நடக்கும் விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார் தமிழக பாஜ புதிய தலைவராக நயினார் இன்று தேர்வு: பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு 50க்கும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல்

1 week ago 5

சென்னை: தமிழக பாஜவின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான விருப்ப மனு தாக்கலில், நயினார் நாகேந்திரன் மட்டுமே மனுவை சமர்ப்பித்துள்ளதால் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார். சென்னை அடுத்த வானகரத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் தமிழக பாஜவின் புதிய தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை மாற்றும் முடிவை அகில இந்திய பாஜ தலைமை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான விவாதங்களும் எழுந்தன. அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லாததால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

2023ல் அதிமுக-பாஜ கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அண்ணாமலை கருதப்பட்டார். இந்த சூழ்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று பாஜ தேசிய தலைமை விரும்புகிறது. அதற்காக அதிமுகவை தனது வளையத்துக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்தது. இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். கூட்டணி தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்றே கூறப்பட்டது. ஆனாலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அதிமுக வைத்த முக்கிய கோரிக்கையே, தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றியே தீர வேண்டும் என்பதாகும். இந்த தகவலை அதிமுக தலைமை, அமித்ஷாவிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தமிழக பாஜ தலைவரை மாற்றும் முடிவுக்கு தேசிய பாஜ தலைமை வந்தது. இதை தொடர்ந்து தான், புதிய தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை வெளிப்படையாக அறிவித்து விட்டு தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து ஒதுங்கினார்.

இதனால், பாஜவின் புதிய தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நயினார் நாகேந்திரன் பெயர் பலமாக அடிபட்டது. அதிமுகவில் இருந்து வந்தவர், தென் மாநிலங்களில் செல்வாக்கு கொண்டவர் என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் நயினார் நாகேந்திரனும் டெல்லி சென்று முகாமிட்டார்.

கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து தலைவர் பதவி தொடர்பாக ஆலோசனை நடத்துவதாகவும் சொல்லப்பட்டது. அதேநேரத்தில் தென்காசி தொழிலதிபரான ஸ்ரீதர் வேம்பு, மயிலாப்பூர் ஆடிட்டர் ஆதரவுடன் ஆனந்தன் அய்யாச்சாமியும் மாநிலத் தலைவர் பதவி ரேசில் இருந்தார். இதனால் அண்ணாமலையை மாற்றி விட்டு வேறு ஒருவரை புதிய தலைவராக நியமிக்க பாஜ மேலிடம் முடிவு செய்தது. இந்த நிலையில் தான் தமிழக பாஜ தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை பாஜ வெளியிட்டது. தமிழக பாஜ தலைவராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று பாஜ தலைமை அறிவித்தது.

மேலும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனுக்களையும் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் வீட்டுக்கு அமித்ஷா நேற்று காலை சென்றார். அப்போது ஆனந்தன் அய்யாச்சாமிக்கு உரிய பிரதிநிதித்துவம் பின்னர் வழங்கப்படும். இப்போது நயினாரை அறிவிக்கிறோம் என்று அமித்ஷா கூறி சமாதானப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தமிழக பாஜ தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் சென்னையிலுள்ள கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.

போட்டியிட விரும்பமுள்ளவர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து விருப்ப மனுவை நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பாஜ தலைவர் பதவிக்கு தேர்தல் விருப்பமனு தொடங்கிய நிலையில் வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்தார். அதற்கான மனுவை, தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தியிடம் வழங்கினார்.

மேலும், பாஜ தேசிய பொதுக் குழு உறுப்பினர் பதவிக்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் விருப்ப மனு அளித்தார். அதேபோன்று, இந்த பதவிக்கு 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.பாலகணபதி, வி.பி.துரைசாமி, கனகசபாபதி ஆகியோர் பரிந்துரை செய்து கையெழுத்திட்டனர்.

இதற்கிடையில், நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழ்நாடு பாஜ தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதன்படி, தமிழ்நாடு பாஜவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக பாஜ மாநில தலைவர் அறிவிப்பு நிகழ்ச்சி, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற உள்ளது.  இதில், பாஜ தேசிய நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, தருண் சுக் ஆகியோர்,

தமிழக பாஜ தலைவர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள் என்றும், சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பாஜ புதிய தலைவர் பதவியேற்பு விழா தேசிய தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜ தலைவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்த பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கட்சியின் அறிவுரைப்படி வேட்புமனு தாக்கல் செய்தேன். 10 ஆண்டு உறுப்பினராக இருந்தால் தான் போட்டியிட முடியும் என்ற விதி குறித்து அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும்’’ என்றார்.

* நயினாருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
சென்னையில் ஆடிட்டர் ஒருவரின் இல்லத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் தமிழக பாஜ தலைவர் பதவி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் தமிழக பாஜ தலைவராக நயினார் நாகேந்திரனை கொண்டு வருவதில் ஆர்எஸ்எஸ் தயக்கம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று, அண்ணாமலையும், நயினாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அமித்ஷா இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்தே, கமலாலயம் வந்த நயினார் நாகேந்திரன் அலுவலக வாசலை தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவு 4 மணிக்கு அறிவிக்கப்படும் தமிழக பாஜ தேர்தல் அதிகாரி சக்ரவர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக பாஜ தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்கள் கமலாலயத்தில் நேற்று பெறப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் கையெழுத்திட்ட பல விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அனைத்து விண்ணப்பங்களுமே கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனையே முன்மொழிந்துள்ளது. வேறு யாரையும் முன்மொழிந்து எந்த விண்ணப்பங்களும் பெறப்படவில்லை. மேலும், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா,

அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நயினார் நாகேந்திரனை ஒரு மனதாக தலைவர் பதவிக்கு முன்மொழிந்தனர். ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவானது இன்று மாலை 4 மணி அளவில் சென்னை வானகரம் ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* விதிகளை தளர்த்தியது ஏன்?
தமிழக பாஜ தலைவர் பதவிக்கான விதிமுறை ஒன்றை கட்சி தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், தமிழக பாஜ தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் 10 ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட தகுதியை இழந்ததாகக் கூறப்பட்டது. இப்படியொரு விதி இருக்கும்போது அண்ணாமலை எப்படி தலைவரானார், புதிய தலைவர் யார்தான் என எண்ணற்றக் கேள்விகள் எழுந்தன. ஆனால், விதிகள் மாற்றப்பட்டுவிட்டதாக இன்று பாஜ தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தி அறிவித்தார்.

The post வானகரத்தில் நடக்கும் விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார் தமிழக பாஜ புதிய தலைவராக நயினார் இன்று தேர்வு: பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு 50க்கும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article