'வாட்ஸ்அப்' மூலம் ஜூனியர் மாணவர்களை சித்ரவதை செய்வதும் 'ராகிங்' ஆக கருதப்படும் - யு.ஜி.சி. எச்சரிக்கை

3 hours ago 1

புதுடெல்லி,

சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை 'ராகிங்' செய்வதாக ஆண்டுதோறும் பல்கலைக்கழக மானிய குழுவுக்கு (யு.ஜி.சி.) ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

பல உயர் கல்வி நிறுவனங்களில், சீனியர் மாணவர்கள் அதிகாரபூர்வமற்ற 'வாட்ஸ்அப்' குழுக்களை அமைப்பதாகவும், அவற்றின் வழியாக ஜூனியர் மாணவர்களை தொடர்பு கொண்டு, அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்வதாகவும் புகார்கள் வருகின்றன.

இப்படி அதிகாரபூர்வமற்ற வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் சித்ரவதை செய்வதும் 'ராகிங்' ஆக கருதப்படும். அதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய அதிகாரபூர்வமற்ற வாட்ஸ்அப் குழுக்களை உயர் கல்வி நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும்.

கல்வி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதில் சமரசத்துக்கு இடமில்லை. 'ராகிங்' தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மானியங்களை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சீனியர் மாணவர்களின் உத்தரவை பின்பற்றாவிட்டால் ஜூனியர் மாணவர்களை சமூக புறக்கணிப்புக்கு உள்ளாக்குவதாக மிரட்டும் சம்பவங்களும் நடக்கின்றன.

ஜூனியர் மாணவர்களின் தலைமுடியை வெட்ட கட்டாயப்படுத்துதல், நீண்ட நேரம் கண் விழித்திருத்தல், வார்த்தைகளால் காயப்படுத்துதல் ஆகியவையும் பொதுவான 'ராகிங்' செயல்களாக கருதப்படுகின்றன. இவையெல்லாம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உளைச்சலை ஏற்படுத்துகின்றன. 'ராகிங்' தடுப்பு விதிமுறைகளை மீறிய செயல்கள். இவை ஏற்புடையவை அல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article