
வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்து போதைப்பொருள் வாங்கிய பெண் மருத்துவர் மற்றும் அவருக்கு டெலிவரி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக ஆன்லைன் மூலம் போதைப்பொருள் விற்கப்படுவதாக ராயதுர்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கடந்த 8-ந்தேதி உணவகம் ஒன்றின் அருகே பெண் மருத்துவர் மற்றும் அவருக்கு போதைப்பொருள் டெலிவரி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 53 கிராம் கோகைன், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பெண் ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் நம்ரதா (34 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கடந்த 4-ந்தேதி மும்பையைச் சேர்ந்த வான்ஷ் தக்கர் என்ற சப்ளையரிடம் வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருளை ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அவருக்கு ரூ.5 லட்சம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து வான்ஷ் தக்கரின் கூட்டாளி பாலகிருஷ்ணா (38 வயது) நேரில் வந்து நம்ரதாவுக்கு டெலிவரி செய்தது தெரிய வந்தது. மேலும் நம்ரதா போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், இதுவரை போதைப்பொருளுக்காக அவர் சுமார் ரூ.70 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.