
சென்னை,
தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன் பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான 'விடுதலை 2' படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தொடர்ந்து சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. இதனால் உடனே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை.
இந்நிலையில் 'வாடிவாசல்' படத்திற்கான இசைபணியை தொடங்கிவிட்டதாக 'கிங்ஸ்டன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜி.வி. பிரகாஷ் கூறியிருந்தார். 'விடுதலை 2' திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு 'வாடிவாசல்' படத்திற்கான வேலைகள் தொடங்கும் என முன்பே இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார். அப்படத்திற்கான பணிகள் தொடங்கியதை அறிவிக்கும் வகையில் தயாரிப்பாளர் தாணு வெற்றிமாறன், சூர்யாவுடனான புகைப்படத்தை சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சென்னை, பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்று வரும் கல்ச்சுரல்ஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது 'வாடிவாசல்' படத்தின் ஷூட்டிங் அப்டேட்டையும் கொடுத்தார். அவர், "வாடிவாசல் திரைப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. மே அல்லது ஜுன் மாதம் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும்." என்று கூறினார்.
'வாடிவாசல்' படத்திற்குபின் தனுஷை வைத்து மற்றுமொரு படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தற்போது பங்கேற்று வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தப் பிறகு 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.