
சென்னை,
நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அவருடன் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்துள்ளனர். சீமானின் மனைவி அவருடன் வரவில்லை.
இதற்கிடையே, வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். காவல்நிலையம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வெளியே தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்சுகளும் நிற்கவைக்கப்பட்டுள்ளன. மேலும், நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களை கைதுசெய்வதற்காக பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காவல் நிலையத்துக்கு அருகே தடுப்புகள் போடப்பட்டுள்ளது. இதனால் சீமானின் கார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சீமானை கார் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் நாதக தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சீமானின் காரை போலீசார் அனுமதித்துள்ளனர். மற்ற கற்களை அனுமதிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
காவல் நிலையத்தில் ஆஜராகும் சீமானிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடிவடைய நள்ளிரவையும் தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.