சென்னை: “தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த இழிவான ஆட்சியல்ல இது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் எவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வரின் ஆட்சி இது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலத் திட்டங்கள் மூலம் திராவிட மாடல் அரசு பெண்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விழி பிதுங்கி, தனது டெல்லி எஜமானர்களின் வழியில் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளிக் கொண்டுவந்து அரசியல் செய்யப் பார்க்கிறார் பழனிசாமி. நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு மக்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கைக் கண்டு விரக்தியின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார் பழனிசாமி.