தர்மபுரி: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று, ஜாமீன் ரத்தாகியும் சிறைக்கு செல்லாமல் இருந்த ரேஞ்சரை, சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலை கிராம மக்கள், போலீஸ் மற்றும் வனத்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதுதொடர்பாக சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் அதிகாரி முதல் வனத்துறை ஊழியர் வரை 215 பேருக்கு, ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மேல்முறையீடு செய்தனர். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டி ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரநாதன்(65). சேலத்தில் வனத்துறை ரேஞ்சராக பணியாற்றி வந்த இவரும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால், இந்த வழக்கில் தண்டனை உறுதியானவுடன், இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அவர் மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.
இதற்கிடையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, தம்மம்பட்டியில் இருந்த ஈஸ்வரநாதனை, சிபிஐ போலீசார் கைது செய்தனர். அவரை சேலம் சிறையில் அடைப்பதற்காக கொண்டு வந்தனர். அப்போது அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
The post வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீன் ரத்தாகியும் சிறைக்கு செல்லாத ரேஞ்சர் கைது: சிபிஐ அதிரடி appeared first on Dinakaran.