வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் தொடர்கின்றன: அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சிகள் சரமாரி புகார்

3 weeks ago 5

சென்னை: அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுக்கும், அதிகாரிகளிடம் இருக்கும் பட்டியலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சியினர் சரமாரி புகார் அளித்தனர். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் வருகிற 29ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோவன் (திமுக), ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக), சந்திரசேகரன், ராஜேஷ் (காங்கிரஸ்), கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் (பாஜக), பார்த்தசாரதி (தேமுதிக), ஆறுமுகநயினார், சுந்தரராஜ் (மார்க்சிய கம்யூனிஸ்ட்), ரவீந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) மற்றும் பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.பாரதி (திமுக): ஒவ்வொரு அனைத்துக்கட்சி கூட்டத்திலும் திமுக சார்பில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நாங்கள் சுட்டிக்காட்டியும், இதுவரை தேர்தல் ஆணையம் செவிசாய்த்ததாக தெரியவில்லை. எங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுக்கும், அதிகாரிகளிடம் இருந்த பட்டியலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. தாம்பரம் ரங்கநாதபுரம் வாக்குச்சாவடியில் 1200 இஸ்லாமிய வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. முறையாக வாக்காளர் பட்டியல் தயாரிக்காததால், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிகிறது.

டி.ஜெயக்குமார் (அதிமுக): வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் தொடர்கின்றன. புகைப்படம் மாறுவது, குடிபெயர்ந்த வாக்காளர்கள் பெயர் 2 இடங்களில் இடம் பெறுவது குறித்து பலமுறை தெரிவித்த பின்னரும் தொடர்கிறது. முகவரி மாறியவர்களின் பெயர்களை தொழில்நுட்பம் மூலம் நீக்கி, 100 சதவீதம் தூய்மையான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

கரு.நாகராஜன் (பாஜ): முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் பெயர் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய இறந்தவர்கள் பெயர்கள் இன்னும் பட்டியலில் உள்ளது.
ரவீந்திரநாத் (இந்திய கம்யூனிஸ்ட்): 17 வயது நிரம்பியவர்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பம் வழங்கி பெயர்களை சேர்க்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம்.
ஸ்டெல்லா (ஆம்ஆத்மி): வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை நீக்க வேண்டும். 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் தொடர்கின்றன: அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சிகள் சரமாரி புகார் appeared first on Dinakaran.

Read Entire Article