வாகனம் மோதியதில் புதுமாப்பிள்ளை பலி

3 hours ago 1

வேளச்சேரி, பிப்.6: பெரும்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை பலியானார். மேடவாக்கம் அடுத்த சந்தோஷபுரத்தில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (22), ஓஎம்ஆர் சாலை, காரப்பாக்கத்தில் உள்ள கேக் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மலர் (21). இவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது.இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மேடவாக்கம், செம்மொழி சாலை வழியாக சோழிங்கநல்லூர் நோக்கி வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம் மத்திய தமிழ் ஆராய்ச்சி மையம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சம்பவம் குறித்த தகவலின்பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து வெங்கடேசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து கண்டறிய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள். திருமணமான மூன்று மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வாகனம் மோதியதில் புதுமாப்பிள்ளை பலி appeared first on Dinakaran.

Read Entire Article