சென்னை: BS4 ரக வாகனங்கள் தடைக்குப் பின், தமிழ்நாட்டில் அவை மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவறிழைத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஜூன் 6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு. 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட BS4 வாகனங்கள், 2020 ஏப்ரலுக்குப் பின் தடை செய்யப்பட்டன, அதற்கு பிறகும் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ்.4 வாகனங்கள் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின் தடை செய்யப்பட்டன. இருப்பினும், 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அவர் அளித்திருந்த மனுவில், “தமிழ்நாட்டில் பி.எஸ்.4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, போக்குவரத்துத் துறை ஆணையருக்கும் தெரிவித்துள்ளோம். இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று (மே 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத் ராஜா, “பி.எஸ். 4 ரக வாகனங்களைப் பதிவு செய்ததில் பல அதிகாரிகள் தவறிழைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தச் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post வாகனப் பதிவு வழக்கில் தவறிழைத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!! appeared first on Dinakaran.