மறைமலைநகர்: “திமுக எப்போதும் வணிகர்களுக்கு எதிரான கட்சி. திமுகவினருக்கு சாதகமாக உள்ள ஒரு சில வணிகர்களை பயன்படுத்தி வணிகர்களிடையே பிளவு ஏற்படுத்துவது திமுகவுக்கு கைவந்த கலை. வணிகர்களின் நலனை பாதுகாப்பதில் அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 42-வது வணிகர் தினம் மற்றும் 7-வது மாநில மாநாடு மறைமலைநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வணிகர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்று வந்தபோது மக்களவையில் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்தது. அதிமுக வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரவு 10 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வியாபாரம் நடத்த சிறப்பு உத்தரவை பிறப்பித்தது.