வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

3 hours ago 2

தாம்பரம்: பல்லாவரம் முதல் பெருங்களத்தூர் வரை ஜிஎஸ்டி சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சானடோரியம் பகுதி ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் நீதிமன்றம் அருகில் இருந்து கடப்பேரி பகுதி வரை ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், பஞ்சர் கடைகள், டயர் விற்பனை கடைகள், இருசக்கர வாகன விற்பனை கடைகள், ஓட்டல்கள், டாஸ்மாக் கடைகள் ஆகியவை அமைந்துள்ளன.

இந்த கடைகளுக்கு வரும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையை ஆக்கிரமித்து 4 முதல் 5 வரிசைகளாக நிறுத்தி வைக்கின்றனர். அதுமட்டுமின்றி பெரும்பாலான வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டு பழுது பார்க்கப்படுகிறது. அதேபோல டாஸ்மாக் கடைகளுக்கு வரும் வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் அகற்றி சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம், சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் சாலை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதேபோல் தள்ளுவண்டி கடைகளும் இருந்தன. இதனை நேற்று போக்குவரத்து போலீசார் அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். மீண்டும் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருக்க தினமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டதாக கணக்கு காட்டி மீண்டும் கண்டுகொள்ளாமல் இருக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article