வாகன சோதனையின்போது லஞ்சம் வாங்கிய வழக்கில் காவலருக்கு 3 ஆண்டு சிறை

16 hours ago 1

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்டாக பணியாற்றி வரும் சவுரிராஜன் என்பவர், கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 25-ந்தேதி காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தங்கராஜ் என்பவர் சவுரிராஜனின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.

அப்போது சவுரிராஜன் உரிய ஆவணங்கள் இன்றி வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக கூறி அவரது அடையாள அட்டையை உதவி ஆய்வாளர் தங்கராஜ் பறிமுதல் செய்ததாகவும், மேலும் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2,000 லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சவுரிராஜன் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் அளித்த புகாரின் பேரில் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.2,000 லஞ்சப்பணத்தை வாங்கியபோது தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் புலனாய்வு முடிக்கபட்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் தனி நீதிபதி வசந்தகுமார் முன்பாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தங்கராஜை குற்றவாளி எனக்கூறி ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7-ன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, அபராதம் ரூ.10,000 மற்றும் பிரிவு 13-ன் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, அபராதம் ரூ.10,000 என மொத்தம் அபராதம் ரூ.20,000 எனவும், 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். 

Read Entire Article