
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
ஒரு பிறப்பில் ஒருவன் கற்ற கல்வி அவனது ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வந்து உதவும் என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியை வழங்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான், உலக மக்கள் பின்பற்றும் தொழில்கள் பலவற்றில், சிறந்த தொழில் ஆசிரியர் தொழில் என்கின்றனர் சான்றோர் பெருமக்கள். எனவே, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பினால்தான் மாணவர், மாணவியர் தரமான கல்வியையும், ஒழுக்கத்தையும் பெற இயலும். ஆனால், ஆசிரியர் பணியிடங்களையும், தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் உடனுக்குடன் நிரப்பாத ஓர் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில், பெரிய அளவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 3,192 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு 04-02-2024 அன்று நடத்தப்பட்டது. இந்த நியமனத் தேர்வில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெற்று, 2,800 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தற்போது, ஒன்பது மாதங்கள் கடந்துள்ள சூழ்நிலையில், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு இன்னமும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினைக் கண்டித்து, பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களை கையில் ஏந்திக் கொண்டு சென்னை எழும்பூர் ராஜராத்தினம் மைதானம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்ற ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதிக்குள் பணி நியமன ஆணைகள் அளிக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனை நம்பி தனியார் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்துவிட்டதாகவும், தற்போது இரண்டு மூன்று மாதங்களாக வேலையில்லாமல் இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். தேர்வு முடிந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், உத்தேசப் பட்டியல் வெளியிட்டு எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், பணி நியமன ஆணைகள் வழங்காததன் காரணம் என்னவென்று புரியவில்லை. ஒருவேளை பணத்தை மிச்சப்படுத்துவதற்காக இதுபோன்ற தாமதத்தை அரசு ஏற்படுத்துகிறதா என்கிற சந்தேகம் ஆசிரியர் பெருமக்களிடையே நிலவுகிறது. மொத்தத்தில், கல்வித் துறையை தி.மு.க. அரசு சீரழித்துக் கொண்டிருக்கிறது.
அம்மா ஆட்சிக் காலத்தில், 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டு, இரண்டே முக்கால் ஆண்டுகளில் 51,757 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஒரே நாளில், 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகியும், அம்மா சாதனையில் பத்து சதவீதத்தைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. தி.மு.க. அரசின் இந்த அலட்சியப்போக்கின் மூலம் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், மாணவ, மாணவியரின் கல்வியும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஏழையெளிய மாணவ மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டும், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்ற அவசரத்தினைக் கருத்தில் கொண்டும், நியமன தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,800 ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.