
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வ வழிபாட்டிற்கும் இந்த மாதம் ஏற்றதாகும்.
ஆடி மாதத்தில்தான் தட்சணாயனம் தொடங்குகிறது. தட்சணாயனம் என்பது சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென்திசை நோக்கி பயணம் செய்யும் காலமாகும். இது ஆடி மாதம் தொடங்கி மார்கழி வரை ஆறு மாதங்களை கொண்டதாகும். இந்தக் காலம் முழுவதும் தேவர்களுக்கு இரவு பொழுதாக கருதப்படுகிறது. இந்த புண்ணிய காலத்தில் நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை போன்ற சிறப்பு வாய்ந்த நாட்கள் வருகின்றன.
ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். அன்றைய தினம் திருவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் நந்தவனத்துக்கு எழுந்தருள்வார். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாடி வழிபட வேண்டும். இதனால் நாம் வேண்டிய அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
அதுபோல ஆடி பௌர்ணமி தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே அன்றைய தினம் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.
சிலர் ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று சொல்வார்கள். இது அவர்களது அறியாமையால் கூறுவதாகும். உண்மையில் 'பீட மாதம்' என்றுதான் அதற்குப் பெயர். அதாவது இறைவனை நமது மனமாகிய பீடத்தில் வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே இதன் உண்மையான பொருள்.
பொதுவாக வெள்ளிக் கிழமை அம்மனுக்கு உகந்த தினமாகும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்
கிழமை தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். அம்மனை வழிபடும்போது லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை அள்ளித் தரும்.
'ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி. அதாவது பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்துகொண்டால் திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம் மற்றும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிய வேண்டும். பின்பு சூரிய உதயத்துக்கு முன்பாக சாணத்தை பிள்ளையாராக பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அருகம்புல் கொண்டு பிள்ளையாரை பூஜிக்க வேண்டும். வாழை இலையில் நெல் பரப்பி, அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.
ஆடி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு திரட்டுப் பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, கருப்பு ஊமத்தம் பூமாலை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எத்தகைய பகைமையும் விலகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.
இந்த ஆண்டு ஆடி மாதம் நாளை மறுநாள் (17.7.2025 - வியாழக்கிழமை) துவங்கி, ஆகஸ்ட் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. கோவில்களில் திருவிழா மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.