
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி அமைப்பது, அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என அரசியல் கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.
இதில், ஆளும் தி.மு.க. தலைமையில் ஓரணியாகவும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையில் மற்றொரு அணியாகவும் இரு பெரும் கட்சிகள் களம் காண்கின்றன. இதேபோன்று நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என அறிவித்து விட்டது. இந்த சூழலில், விஜய் தலைமையில் த.வெ.க.வும் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில், த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இவருடைய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இந்நிலையில், அவருடைய அலுவலகம் அருகே, 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் ஆட்டோவில் சுற்றி, சுற்றி வந்தனர் என கூறப்படுகிறது.
இதுபற்றி சென்னை தி.நகர் துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் இருக்கும் தனது அலுவலகம் அருகே கடந்த ஜூலை 10-ந்தேதி ஆயுதங்களுடன் சில மர்ம நபர்கள் வந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் தனது அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர் என்றும் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்தினர் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் சதி திட்டம் என்னவென்று தெரியவில்லை. அது விசாரணைக்குரியது. என்னுடைய உயிருக்கு நேரடியாக ஆபத்து உள்ளது என்று ஆதவ் அர்ஜுனா அவருடைய புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.
அந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்தனர்? யாருடைய உத்தரவின்படி நோட்டமிட்டனர் என போலீசார் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து உள்ளார். இதனால், த.வெ.க. ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.