வடலூர்: ‘வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்’ என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். வள்ளலாரின் 202வது அவதார தினமான நேற்று, வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் அதிகாலை 5 மணி முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. இதில் அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சத்திய தரும சாலையில் காலை 7.30 மணி அளவில் கொடி பாடல் பாடியபடி சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. அங்கு அன்னதானத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: வள்ளலார் பிறந்த தினத்தை காருண்ய தினமாக முதல்வர் அறிவித்துள்ளார்.
வள்ளலாரின் 200வது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடி வள்ளலாருக்கு பெருமை சேர்த்தவர் முதல்வர். அதற்காக ரூ. 3.6 கோடி நிதி ஒதுக்கி ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கினார். திமுக தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் வாழ்ந்த இடத்தில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்த முதல்வர், ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அத்திட்டத்தை செயல்படுத்தினார். அதற்கு சில இடையூறுகள் ஏற்பட்டன. அந்த இடையூறுகள் நீங்கி மீண்டும் பணி விரைவில் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வள்ளலார் சர்வதேச மையம் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.