ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மருதூரை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி அபிநயா. டாக்டர்களான இருவரும் மருதூரில் கிளினிக் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டாக்டர் அபிநயாவின் வளைகாப்பு விழா, மருதூர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. வளைகாப்பு விழா நடந்த மண்டபத்தில் தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. சமீப காலமாக தர்பூசணி பழத்தில் ரசாயனம் கலக்கப்படுவதாக வதந்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. இதனால் தர்பூசணி பழத்தை வாங்காமல் பொதுமக்கள் புறக்கணித்து வந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதை கருத்தில் கொண்டு விவசாயத்தை காப்பாற்ற வேண்டும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வளைகாப்பு விழாவுக்கு வருவோருக்கு தர்பூசணி பழங்கள் வழங்க டாக்டர் தம்பதி முடிவு செய்தனர். இதற்காக தான் மண்டபத்தில் தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து விழாவில் பங்கேற்ற 700க்கும் மேற்பட்டோருக்கு தாம்பூல பையுடன் தலா ஒரு முழு தர்பூசணி பழம் வழங்கப்பட்டது. விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வளைகாப்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு டாக்டர் தம்பதியினர் தர்பூசணி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post வளைகாப்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு தர்பூசணி பழம் வழங்கிய மருத்துவ தம்பதி appeared first on Dinakaran.