சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12ம் தேதி வரை அனேக இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக கோவை, திருப்பூர், தேனி , திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று தொடங்கி 11ம் தேதி வரையும், 12ம் தேதியில் செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 90 டிகிரியை ஒட்டி இருக்கும். தமிழக கடலோரப் பகுதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று முதல் 12ம் தேதி வரை வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post வளி மண்டல சுழற்சி 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு appeared first on Dinakaran.