
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா சின்னப்பா லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் திரிபர்ணா பாயிக்(வயது 36). மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்தார். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் 3 நாய்கள் வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி திரிபர்ணாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் திரிபர்ணாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது திரிபர்ணா, தனது வளர்ப்பு நாயை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி சாக்குபையில் பொதிந்து ஒரு அறையில் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அந்த அறையில் சாமி படங்கள் மற்றும் பூஜை பொருட்களும் இருந்தன. இதுகுறித்து மகாதேவபுரா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திரிபர்ணா, மாந்திரீகம் செய்ய நாயை கழுத்தை அறுத்து கொன்றதுடன், உடலை துண்டு, துண்டாக வெட்டியது தெரியவந்தது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மாந்திரீக பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது அந்த பெண் தலைமறைவாக உள்ளார். இதுகுறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.