வளரிளம் பருவத்தினர் சிக்கல்கள்!

11 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

ஓர் அலசல்!

ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஜாக்கி சான் தன் மகனைப் பற்றி ஒரு நேர்காணலில் சொன்ன விஷயங்கள் யூடியூப்பில் வைரலானது. தன்னுடைய இளமைப் பருவத்தில் தான் எப்படி பெரியவர்களை மதிப்பவனாகவும், பொருட்களை அந்தந்த இடத்தில் நேர்த்தியாக வைப்பவனாகவும், அமர்ந்திருப்பது, நிற்பது என எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கையும் பணிவையும் கொண்டிருப்பவனாகவும் இருந்தேன் எனவும் தன் மகன் எப்படி இதை எல்லாம் எந்தப் பொறுப்பும் இல்லாமல் செய்கிறார் எனவும் தனக்கே உரிய பாணியில் சிரிக்க சிரிக்க சொல்லியிருப்பார். நகைச்சுவை என்றாலும் ஜாக்கி சான் சொன்ன விஷயங்கள் வெறும் தமாஷ் மட்டுமே அல்ல; அதில் ஒரு பொறுப்புள்ள தந்தையின் வருத்தமும் அக்கறையும் உள்ளது.

மாறுவது ஒன்றே மாறாதது என்பார்கள். மனித வாழ்வும் நாகரிகமும்கூட நாள்தோறும் மாறிக்கொண்டேயிருப்பதுதான். அதுபோலவே சென்ற தலைமுறையின் வாழ்க்கை போன்றது அல்ல இந்தத் தலைமுறைக்கு வாய்த்திருக்கும் வாழ்வு. சென்ற தலைமுறையினர் இருபது வயதுக்குப் பிறகுதான் கம்ப்யூட்டரையே பார்த்திருப்பார்கள். இந்தத் தலைமுறையினர் கண் விழிப்பதே ஸ்மார் போனிலும் லேப் டாப்பிலும்தான்.

சென்ற தலைமுறையினருக்கு 100 சி.சி பைக்குகளில் அமர்வதற்குள் 20 வயதாகிவிட்டது. இந்தத் தலைமுறை பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்பே 350 சி.சியில் பேய்த்தனமாய் பறக்கிறார்கள். பரோட்டாவை பார்ப்பதற்கே திருவிழா வர வேண்டும் என்பது அந்தக் காலம். பரோட்டாக்களின் ஆட்சியை அகற்றிவிட்டு பீட்சாக்களும் பர்க்கர்களும் ஃப்ரெஞ்ச் ஃப்ரைகளும் கோலோச்சுவது இந்தக் காலம்.

இப்படி, டெக்னாலஜி முதல் உணவுப் பழக்கங்கள், கல்விச் சூழல், வாழ்க்கை முறை என சகலமும் மாறிப்போய் எது சரி? எது தவறு என்று யாருக்குமே புரியாமல் தள்ளாடித் தவித்துக்கொண்டிருக்கிறது இளைய தலைமுறை. இன்றைய ஜென் தலைமுறையின் பிரச்னைகள் என்ன இதற்கு எல்லாம் என்னதான் தீர்வு வாங்க பார்க்கலாம்.

மதிப்பீடுகள் அவசியம்

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று கூட்டுக்குடும்பமாய் வாழும் வாழ்வு சிதறி தனித் தனி சிறிய குடும்பங்களாய் உடைந்துபோனது போன தலைமுறையில். நாம் இருவர் நமக்கு இருவர் என வளமான வாழ்வுக்கேற்ற அளவான குடும்பங்கள் உருவான போதே உறவுகளுக்கிடையே இருந்த அன்னியோன்யமும் பிடிப்பும் தளரத் தொடங்கிவிட்டது. பின்னர், இந்த தனிக் குடும்பங்களும் அப்பா, அம்மா, குழந்தை என்ற மூன்றே பேர் கொண்ட நியூக்ளியர் ஃபேமிலிக்களாக பரிணாமம் அடைந்துவிட்டது. தாயும் தந்தையும் வேலைக்குச் சென்றுவிட தனியாகவே வளர்கிறார்கள் குழந்தைகள். குழந்தையுடன் நேரம் செலவழிக்க முடியாத குற்றவுணர்வில் கேட்டதை எல்லாம் வாங்கித் தருகிறார்கள் பெற்றோர். இது எல்லாம் குழந்தையின் குணநலங்களில் பிரதிபலிக்கிறது.

உறவுகளின் அருமை, சக மனிதர்கள் மீதான மரியாதை; அக்கறை, பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும். மற்றவர் முன்னிலையில் எப்படி அமர வேண்டும்; எப்படிப் பேச வேண்டும் என வாழ்வியல் சார்ந்த விஷயங்களைப் போதிப்பதற்கு பெரியவர்கள் என யாரும் இல்லாததால் அந்தக் குழந்தைகளுக்கு இது எல்லாம் தெரியாமலே போகின்றன. வீட்டில் எப்படி பிடிவாதமாகவும் அலட்சியமாகவும் நடந்துகொள்வார்களோ அப்படியே வெளியேயும் நடந்துகொள்கிறார்கள்.

தீர்வு: காலையில் எழுந்ததும் படுக்கையை, போர்வையை மடித்து வைப்பது முதல் இரவில் பால் குடித்தபின் டம்ளரை கழுவி வைப்பது வரை ஒவ்வொரு நல்ல பழக்கத்தையும் செய்ய குழந்தைகளை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். பள்ளி முடிந்து வந்ததும் புத்தகப் பையை ஒரு குறித்த இடத்தில் வைப்பது, ஷூ, ஷாக்ஸை கழட்டி வெளியே ஸ்டாண்டில் வைப்பது, ஒவ்வொரு பொருளையும் அதனதன் இடத்தில் வைப்பது, சுத்தமாக வைத்திருப்பது, வீட்டில் அமர்ந்திருக்கும்போது சரியான போஸ்சரில் அமர்ந்திருப்பது, அனைவருடனும் மரியாதையுடனும் இணக்கத்துடனும் பழகுவது, நன்றி, மன்னிப்பு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது என ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் குழந்தைப் பருவம் முதலே கற்றுத் தர வேண்டும்.

என்னதான் வாழ்க்கை என்பது மாறிக்கொண்டேயிருந்தாலும் எல்லோருக்கும் அடிப்படையான சில மதிப்பீடுகள், விழுமியங்கள் உள்ளன. இவை எல்லாம் ஆயிரமாண்டு கால மானுட வாழ்வின் பயனாக நம் முன்னோரிடம் இருந்து நாம் பெற்றவை. இவற்றை முறையாகக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம்.

உணவுப் பழக்கம் உஷார்

ஒரு கையில் பீட்சாவும் இன்னொரு கையில் கோலாவும் இருப்பதுதான் ஃபேஷன் என நினைக்கும் தலைமுறை இது. அரக்கப் பறக்க காலையில் எழுந்து இருக்கும் டிபனை பேருக்குக் கொறித்துவிட்டு, உண்டும் உண்ணாமலும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் ஓடி இடைவேளையில் ஜங்க் ஃபுட் நொறுக்கி மதியத்துக்கு குட்டியூண்டு டிபன் பாக்ஸில் அடைத்துக்கொண்டு வந்ததை உண்டு மாலையில் ஸ்நாக்ஸ் கொறித்து இரவில் மொபைலை நோண்டிக்கொண்டோ டி.வியைப் பார்த்துக்கொண்டோ அரைகுறையாய் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குப் போகிறார்கள் பெரும்பாலானவர்கள்.

இப்படியாக எந்தச் சத்தும் இல்லாத உணவுகளைத் தேடித் தேடி உண்பதும் சத்தானவற்றை உண்ணாமல் இருப்பது நோய்க்கு ஹாய் சொல்லும் ஆபத்தான வாழ்க்கைமுறை என்பதை உணர வேண்டும். இந்தியப் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு அனீமியா எனும் ரத்தசோகை பிரச்னை உள்ளது. படித்த, மேல்தட்டு வர்க்கத்துப் பெண்களுக்குகூட ரத்தசோகை உள்ளது என்பதன் பொருள் அவர்களின் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்தான். மறுபுறம் ஜங்க் ஃபுட்டாக உண்பது தேவையற்ற உடற்பருமனை உருவாக்கும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் என பல்வேறு கோளாறுகளுக்கும் உடற்பருமன்தான் தலைவாசல்.

தீர்வு: ஆரோக்கியமான உணவுகளே ஆரோக்கியத்தின் நண்பன். வெள்ளை அரிசி, சிவப்பு அரிசி போன்றவற்றுடன் சிறுதானியங்களையும் போதுமான விகிதத்தில் உணவில் சேர்க்க வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் இணைந்த வானவில் கூட்டணி மெனு ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். இந்த உணவுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணம் என உடலில் சேர்க்கலாம். இதனால், கார்போஹைட்ரேட், புரதங்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் போன்ற எல்லாவிதமான அத்தியாவசியமான சத்துக்களும் உடலில் சேரும். உணவு இடைவேளைகளின் போது பீட்சா, கோலா போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு சிறுதானியங்களில் செய்யப்பட்ட ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். இதனால், செரிமானம் மேம்படும். உடற்பருமன் தடுக்கப்படும்.

ஓடி விளையாடு

முன்பொரு காலம் இருந்தது. ‘காலை எழுந்ததும் படிப்பு… மாலை முழுதும் விளையாட்டு’ என்றொரு வாழ்க்கைசூழல் இருந்தது. அப்போதைய குழந்தைகள், இளைஞர்களின் ஆரோக்கியத்தோடு ஒப்பிடும்போது இப்போதுள்ள குழந்தைகள், இளைஞர்களின் ஆரோக்கியம் மிகவும் மோசமாக உள்ளது. உலகிலேயே குழந்தைகள் ஒபிஸிட்டி அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. கல்லூரி இளைஞர்கள்கூட தொந்தியும் தொப்பையும் வழுக்கைத் தலையுமாகத் திரிவதைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.

நன்றாகப் படித்தால்தான் நல்ல எதிர்காலம் என்று சொல்லி சொல்லியே வெறும் காகித மலர்களாகக் குழந்தைகளை மாற்றிவிட்டோம். இன்று நிறைய பள்ளிகளில் விளையாட்டுப் பீரியடே இல்லை என்கிற அவலம் உள்ளது. இது எல்லாம் நமது இளைய தலைமுறையின் ஆரோக்கியத்துக்கு உலைவைக்கும் காரியங்கள். படிப்பு அவசியம்தான். ஆனால், அதே அளவுக்கு விளையாட்டும் அவசியம்.

தீர்வு: உடல் உழைப்பற்ற சக்கைகளாக குழந்தைகளை மாற்றுவது ஆபத்தானது. அன்றாடம் நாம் உண்ணும் உணவில் இருந்து சேகாரம் ஆகும் ஆற்றல் செலவழிக்கப்படாமல் இருக்கும்போது கொழுப்பாக உடலிலேயே தங்குகிறது. எனவே, அன்றன்று சேரும் ஆற்றலை அன்றன்றே எரிப்பது அவசியம். உங்களுக்கு என ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுங்கள். அது, கிரிக்கெட்டோ, வாலிபாலோ, கால்பந்தோ ஏன் நடனமாகவோகூட இருக்கலாம். உடல் உழைப்பு முக்கியம். படிப்புக்கும், வேலைக்கும் நேரம் ஒதுக்குவது போலவே விளையாட்டுக்கும் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள். விளையாட்டால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு மனமும் புத்துணர்ச்சி அடைகிறது.

உடலையும் மனதையும் வடிவமைக்க விளையாட்டு ஒரு அழகான வழிமுறை. அதிகாலையில் எழுந்து தினசரி, அரை மணி நேரம் நடப்பது என்ற வழக்கத்தை இப்போதே ஏற்படுத்துங்கள். நீச்சல், ஜாகிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்களில் ஈடுபடுங்கள். இது உங்கள் வாழ்நாள் முழுக்க உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அழகான சூத்திரம். முதுமையில் உடல் வலுவாக இருக்க இளமையில் இருந்தே உடலைப் பழக்கப்படுத்த வேண்டியது அவசியம்.

எலெக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸ்

செல்போன், டேப்லெட், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றை எல்லாம் இன்றைய தலைமுறை மிக இயல்பாகக் கையாள்கிறார்கள். வளரிளம் பருவத்தினரிடம் இந்த எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ்கள் உருவாக்கும் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது. வீடியோ கேம் அடிக்‌ஷன் என்ற ஒரு புதிய மனநோய் ஒன்று நம் காலத்தின் கொடை. எப்போதுமே வீடியோ கேம் விளையாண்டுகொண்டே இருப்பவர்களுக்கு இந்த அடிக்‌ஷன் ஏற்படுகிறது.

ப்ளூவேல் போன்ற கொலைகார விளையாட்டுகள் வீடியோ கேம் மேனியாக்குகளுக்காகவே வடிவமைக்கப்பட்டவை. இதைத் தவிர ஃபேஸ்புக், வாட்ஸப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் சொல்ல வேண்டும். ஒருவகையில் செய்திகளை வேகமாக பகிர்வதற்கான ஊடகங்களாக இவை இருந்தாலும் இவற்றில் உடலையும் மனதையும் கெடுக்கும் விஷயங்களும் அதிகமாக உள்ளன. வீடியோ கேம் அடிக் ஷன் மட்டும் இல்லாமல் பேஸ்புக் அடிக்‌ஷன், வாட்ஸப் அடிக்‌ஷன் போன்ற மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

மாலையில் போனை கையில் எடுத்தால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று பின்னிரவு வரை அரட்டை அடித்துவிட்டு விடிவதற்கு சற்றுமுன்புதான் உறங்கச் செல்கிறார்கள். இது ஏற்படுத்தும் உடல், மனம் சார்ந்த பிரச்னைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. இரவு என்பது நம் உடலின் உள் உறுப்புகள் தம்மை மறுநாளுக்குத் தயார் செய்துகொள்ளும் ஓய்வின் நேரம். இந்த நேரத்தில் நாம் விழித்திருக்கும்போது உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மெலட்டோனின் என்ற ரசாயனம் நாம் உறங்கும்போதுதான் உடலில் சுரக்கும். மூளையைப் புதுப்பிக்கும் இந்த ரசாயனம் சுரப்பது பாதிக்கப்படுவதால் உடல் சோர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மை, படபடப்பு, தன்னம்பிக்கைக் குறைவு உட்பட பல்வேறு உடல், மனப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக நேரம் ஒளிர்திரையைப் பார்ப்பதால் பார்வைத்திறனும் பாதிக்கப்படுகிறது. மேலும், சமூகத்துடனான தொடர்பு குறைந்துபோய் தனிமைப்பட்டவர்களாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.

தீர்வு: செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை அளவாகப் பயன்படுத்துங்கள். மறுநாள் நேரமே எழுவது என்பது முதல் நாள் நேரமே உறங்கச் செல்வதில்தான் உள்ளது. எனவே, இரவு ஒன்பது மணிக்கு எல்லாம் படுக்கைக்குச் செல்லும் பழக்கதை ஏற்படுத்துங்கள். உறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு செல்போன், டி.வி உள்ளிட்ட ஒளிர்திரையைப் பார்ப்பதைத் தவிர்த்திடுங்கள். தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஒளிர்திரையைப் பார்க்க நேர்ந்தால் 20:20:20 என்ற பயிற்சியைப் பின்பற்றுங்கள்.

அதாவது, 20 விநாடிகள் 20 அடி தொலைவில் உள்ள பொருளைப் பார்த்துவிட்டு 20 முறை கண் சிமிட்டுங்கள். விடுமுறை நாட்களில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தியுங்கள். இதனால் உறவுகள் வலுப்படும். மாணவர்கள் குரூப் ஸ்டடி செய்வது அவர்களைத் தனிமையில் இருந்து மீட்க உதவும். பொது நிகழ்வுகளுக்குப் போவது, வெளியிடங்களுக்குச் செல்வதன் மூலம் சமூகத்துடனான தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ள முடியும். புத்தகங்கள் மூலம் தெரிந்துகொள்ள சாத்தியமான விஷயங்களை புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். அதையும் கூகுளில் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்.

மனஅழுத்தம்

குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படும் சூழல் உள்ள நாடுகளில் நம் நாட்டுக்கும் இடம் உண்டு என்கிறது ஓர் அறிக்கை. ‘மனஅழுத்தம் இன்றைய இளைஞர்களின் டாப் 10 பிரச்னைகளில் ஒன்று’ என்கிறார் பிரபல மனநல மருத்துவர் அசோகன். கல்விச்சூழல், பணிச்சூழல், குடும்பச்சூழல், உறவுச்சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் இன்றைய இளைஞர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். எப்போதும் தனிமையில் இருப்பது, சமூகத் தொடர்பை தவிர்ப்பது, தன்னம்பிக்கைக் குறைவு, காரணமற்ற கோபம், எரிச்சல், படபடப்பு போன்றவை தீவிரமான மனஅழுத்தத்தின் அறிகுறிகள். ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் மனஅழுத்தத்துக்குக் காரணமாகக்கூடும் என்கிறார்கள்.

தீர்வு: என்ன காரணத்தினால் மனஅழுத்தம் ஏற்படுகிறது என்று கவனியுங்கள். பெற்றோரிடம், நண்பர்களிடம், உறவினர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். செல்போன், டி.வி, கணிப்பொறி போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களில் மூழ்கிக் கிடப்பதைத் தவிர்த்திடுங்கள். சமூகத்துடன் நேரடித் தொடர்புகொள்ளுங்கள். தோல்விகளை ஏற்றுக்கொள்வது ஒரு முதிர்ச்சி. எனக்கு மட்டுமே இது நடக்கிறது என்கிற மனோபாவத்தைக் கைவிட்டு விட்டு பிரச்னைகளைக் களைவது எப்படி என ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்.

பாடத்திட்டத்துக்கு வெளியே பிற நல்ல புத்தகங்கள் வாசிப்பது, இசை கேட்பது, இயற்கையான சூழலில் இருப்பது என ஆறுதல் தரும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். எப்போதும் நேர்மறையான சிந்தனைகளையே கொண்டிருங்கள். மனம் சற்று சோர்வாக இருந்தாலும் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது என ஏதேனும் ஒரு உடல் உழைப்பு சார்ந்த செயலில் ஈடுபடுங்கள். உடல் நலம் சரியில்லாதபோது மனதை தைரியப்படுத்தி குணமாக்குவதுபோல மனசு சுணங்கும்போது உடலை வலுவாக்குவதன் மூலம் உற்சாகமாகலாம்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

The post வளரிளம் பருவத்தினர் சிக்கல்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article