பூந்தமல்லி: வளசரவாக்கம் பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் விற்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இதில் கிடைத்த பணம் மூலம் அவர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் தடை செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வளசரவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வளசரவாக்கம் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் வளசரவாக்கம், ஆர்.கே.சாலையில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படி வந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது, அவரிடம் தடை செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர் விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (21) என்பதும், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்பதும், இவர் இரவு நேரங்களில் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 4 கிராம் போதைப்பொருள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் விலை உயர்ந்த செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும்போது போலீசாரால் கண்டு பிடிக்க முடியாது என்றும், போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post வளசரவாக்கம் பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் விற்ற கல்லூரி மாணவர் கைது: உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம் appeared first on Dinakaran.