வல்லநாடு ஆற்றுப்பாலம் மீண்டும் சேதம்

2 weeks ago 5

Vallam, Bridgeசெய்துங்கநல்லூர் : வல்லநாடு ஆற்றுப்பாலம் மீண்டும் சேதமடைந்துள்ள சம்பவம், வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு 4 வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்புகின்றன.

இதேபோல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன. மேலும் தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் ஆலைக்கு வந்து செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வரும். இந்த 4 வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரமாண்டமான பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்டதில் இருந்தே பலமுறை பாலத்தில் சேதம் ஏற்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் இரு பகுதியும் ரூ.4 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு போக்குவரத்து தொடங்கியது.

தொடர்ந்து ஓராண்டுகள் கூட நிறைவடைவதற்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. மேலும் பாலத்தின் 2 பகுதிகளிலும் மாறி மாறி ஓட்டை ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து பாலத்தில் 8 முறை ஓட்டை விழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலத்தை சீரமைக்க சுமார் 13.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது.

முதற்கட்டமாக பாலத்தின் மேல் முழுமையாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. பாலத்தில் போக்குவரத்து தொடங்கி 6 மாத காலம் கூட முடிவடையாத நிலையில், தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் நடுவே கனரக வாகனங்கள் சென்றபோது சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சேதமடைந்த இடத்தை தடுப்பு வேலிகள் வைத்து அடைத்து வைத்துள்ளனர்.

ஏற்கனவே பலமுறை இந்த பாலம் சேதமடைந்த நிலையில் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பாலம் சேதமடைந்திருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் பூல்பாண்டி கூறுகையில், 4 வழிச்சாலை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 12வது முறையாக ஓட்டை விழுந்துள்ளது.

சீரமைக்க ஒதுக்கப்பட்ட 13.22 கோடி எங்கே போனது என்று தெரியவில்லை. இதற்கு எப்போது தான் முடிவு கிடைக்கும். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் பாலத்தின் தன்மையை ஆய்வு செய்து பாலத்தின் மேற்பகுதியை தகர்த்துவிட்டு புதியதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post வல்லநாடு ஆற்றுப்பாலம் மீண்டும் சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article