வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா

1 day ago 3

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வரதராஜம் பேட்டையில் பிரசித்தி பெற்ற மகா மாாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை வேளையில் வெள்ளி அன்ன வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.

முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா இன்று நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சகல விதமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல் பூரணநலம் பெற வேண்டி அம்மனை வேண்டிக் கொண்டு நலம் பெற்றவர்கள் இந்த நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நோயில் இருந்து குணமடைந்தவர்களை ஆற்றில் குளிக்க வைத்து, நெற்றியில் திருநீறு பூசி, பச்சை பாடையில் படுக்க வைத்து இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் எப்படி நடக்குமோ அதை போன்று அவர்களை, அவர்களது உறவினர்கள் முன்னிலையில் பாடையில் படுக்க வைத்து கண், கால்களை கட்டி, வாயில் வாய்க்கரிசி போட்டு, உறவினர்கள் 4 பேர் பாடையை சுமந்து கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். பின்னர், கோவில் பூசாரி பாடையில் படுத்திருப்பவருக்கு திருநீறு பூசி அவரை எழச்செய்தார்.

இதேபோல், குழந்தைபேறு இல்லாதவர்கள், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொட்டில் காவடி எடுத்தும், அவரவர்களின் வழக்கப்படி ரதக்காவடி, அலகுக்காவடி, பக்க அலகு காவடி, பால் அலகுக்காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். டெல்டா மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். பங்குனி திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி வரை நடக்கிறது.

Read Entire Article