
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை ஆலங்காயம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தை நெருங்கியபோது, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத காத்திருந்த மாணவி பஸ்சை கைகாட்டி நிறுத்தினார்.
ஆனால், பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, பஸ்சை விட்டுவிட்டால் தேர்வு எழுதச் செல்ல முடியாதே என்ற அச்சத்தில் பஸ்சை பிடித்துக்கொண்டே பின்னால் ஓடிச் சென்றார். சற்று தொலைவிலேயே சென்று பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அதன்பிறகு மாணவி பஸ்சில் ஏறிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், தேர்வு எழுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பஸ் ஓட்டுநர் முனிராஜ் மீது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) மேலாண்மை இயக்குநர் விசாரணை மேற்கொண்டார். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.