வறட்சியால் ஆறுகளில் நீர் வரத்து குறைந்தது உணவு, குடிநீர் தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்

3 hours ago 2

மஞ்சூர் : வறட்சியின் காரணமாக ஆறுகளில் நீர் வரத்து பெருமளவு குறைந்து போனதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புறங்களில் கெத்தை, கிண்ணக்கொரை, அவலாஞ்சி, அப்பர்பவானி, தாய்சோலை பகுதிகளில் அடர்ந்த காப்பு காடுகள் உள்ளன. இந்த காடுகளில் பல வகையிலான மரங்கள், தாவரங்கள், மூலிகைகள், செடி, கொடிகள் உள்ளன.

மேலும் சிறுத்தை, புலி, யானை, கரடி, மான்கள், காட்டு மாடுகள், செந்நாய்கள், கருங்குரங்குகள், முள்ளாம் பன்றிகள் போன்ற வனவிலங்குகள், பறவைகளின் வாழ்விடமாகவும் காடுகள் அமைந்துள்ளது. இந்த காடுகளின் இடையே அருவிகள், சிற்றாறுகள், குட்டைகள் உள்ளதால் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, இரைகளுடன் குடிநீரும் கிடைத்து வருகிறது. கடந்த நவம்பரில் துவங்கிய பனியின் தாக்கம் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அவ்வப்போது உறை பனியும் கொட்டுகிறது.

இதனால், வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மரங்கள், செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து வருகிறது. மழை அறவே பெய்யாததாலும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வறட்சியின் காரணமாக நீர் வரத்து அடியோடு குறைந்துள்ளது.

மஞ்சூர் அருகே உள்ள பெரும்பள்ளம், முள்ளி, தொட்டஹள்ளா, பிகுளி உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் நீரோட்டம் குறைந்துள்ளது. இதனால், உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.இதேபோல், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகள், நீர் தேக்கங்களிலும் நீர் இருப்பு பெருமளவு குறைந்து வருவதால் அடுத்து வரும் வாரங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

The post வறட்சியால் ஆறுகளில் நீர் வரத்து குறைந்தது உணவு, குடிநீர் தேடி இடம் பெயரும் வனவிலங்குகள் appeared first on Dinakaran.

Read Entire Article