வர்த்தகப்போர்

2 hours ago 1

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு தடாலடியாக பல அறிவிப்புகளை வெளியிட்டு உலகையே அதிர்ச்சி அடைய செய்து வருகிறார். எச்1பி விசா, கிரீன் கார்டு ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்த அவர் செல்வந்தர்களை ஈர்க்க கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகம் செய்தார். இதையடுத்து அரசு செலவினங்களை குறைக்க அமெரிக்காவில் 440 அரசு கட்டிடங்களை விற்க முடிவு செய்துள்ளார். இதில் முக்கிய புலனாய்வு அமைப்பான எப்பிஐ கட்டிடமும் ஒன்றாகும். மேலும் உள்நாட்டு வருவாய் சேவைப்பிரிவில் பணியாற்றும்

90 ஆயிரம் பேர் ஊழியர்களை பாதியாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்த அதிரடி அட்ராசிட்டிகளை கண்டித்து 50 மாகாணங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டார். இதையடுத்து உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

அமெரிக்காவை பகைத்து கொள்ள விரும்பாத உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டிரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் உக்ரைனில் கனிமவளங்களை வெட்டி எடுக்கும் அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகவும் பணிந்துள்ளார். இதனால் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு 10 முதல் 25 சதவீத வரியை விதித்துள்ள நிலையில் கடும் கோபமடைந்த அந்நாடுகள் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரியை உயர்த்தி அறிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப், நட்பு நாடுகளுக்கு எதிராக வர்த்தகப்போரை தொடங்கியுள்ளார். அதே சமயம் புடினை திருப்திப்படுத்த ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுகிறது. வரியை அதிகரித்து கனடாவின் பொருளாதாரத்தை வீழ்த்தி விடலாம் என்று டிரம்ப் நினைப்பது நடக்காது. அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா மாறாது என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதே போல், அமெரிக்காவுடன் வரிப்போர், வர்த்தகப்போர் மட்டுமல்ல, எந்த வித போருக்கும் சீனா தயார் என்று அந்நாடு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. டிரம்ப்பின் வரி மிரட்டலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. வரியை அதிகப்படுத்தியதற்கான காரணத்தை விளக்கிய டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில், மெக்சிகோ, கனடா, இந்தியா, சீனா நாடுகள் நாங்கள் வசூலிப்பதை விட அதிக வரியை எங்கள் பொருட்களுக்கு வசூலிக்கின்றன.

நாங்கள் பலவகையில் இந்நாடுகளுக்கு உதவி செய்கிறோம். ஆனாலும் நண்பர்களும், எதிரிகளும் வரி விஷயத்தில் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறார்கள். பூமியில் உள்ள அனைத்து நாடுகளாலும் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்’ என்று விளக்கமளித்துள்ளார். அதிபர் டிரம்ப் நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டிலேயே எதிர்ப்பு இருந்தாலும் அதையெல்லாம் ஓரம்கட்டி சர்வாதிகாரியாக டிரம்ப் செயல்பட தொடங்கியுள்ளார். குறிப்பாக அண்டை நாடுகளை உரசிப்பார்க்கும் அவரது அறிவிப்புகள் ஏற்றத்தையும், மாற்றத்தையும் அமெரிக்காவுக்கு தருமா? அல்லது ஏமாற்றம் தான் மிஞ்சுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

The post வர்த்தகப்போர் appeared first on Dinakaran.

Read Entire Article