‘‘இலைக்கட்சி ஆட்சியில் அரசு வேலை எடுத்தவங்களின் கான்டிராக்ட் பில்லை மட்டும் டக்டக்குன்னு பாஸ் செய்றாங்களாமே ராஜ விசுவாச அதிகாரிகள்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘காட்டன் மாவட்டத்தில் காரமான வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிங்க வேலைகளை சரிவர கவனிக்காமல் மிகவும் ஸ்லோவாக நடக்கிறதா புகார் எழுந்திருக்கு.. குறிப்பா அரசு வேலைகளை எடுத்து செய்யும் கான்டிராக்டர்களுக்கு பில் செட்டில் செய்வதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக கான்டிராக்டர்கள் குமுறுகிறாங்க..
அதிலும் குறிப்பா இலைக்கட்சி ஆட்சி நடந்தப்ப வேலைகளை எடுத்து செய்த கான்டிராக்டர்கள் பில் மட்டும் உடனுக்குடன் பாஸ் செய்து ராஜ விசுவாசத்தை காட்டுகிறார்களாம்.. மற்ற பில்களை நீண்ட நாட்களாக பெண்டிங் வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கு.. இதே நிலை தொடர்ந்தால் இனி அரசு வேலைகளை எதுவும் எடுத்து செய்யப் போறது இல்லன்னு கான்டிராக்டர்களில் ஒரு தரப்பினர் மல்லுக்கட்ட தயாராகிட்டு வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஓட்டைக் கப்பலில் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பயணிப்பதோ என இலைக்கட்சியினர் புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்டத்தில் பலாப்பழக்காரர் ஆதரவாளர்கள் தற்போதைய வெயிலை காட்டிலும் ரொம்பவே சூடாக இருக்காங்க.. கடந்த 2ம் தேதி சேலத்துக்காரர், பலாப்பழக்காரரின் சொந்த ஊரான பிக்பாண்டுக்கு அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இவரை பிரமாண்டமாக வரவேற்பதற்காக இலைக்கட்சியினர், சுற்றிலும் 20 கிமீ தூரத்திற்கு கட்சி கொடிகளையும், பேனர்களையும் அதிகளவு வைத்திருந்தாங்க..
கூட்டம் பெருசா சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாமல் போனாலும், பலாப்பழக்காரரை கடுப்பேற்றும் வகையில், பல இடங்களில் மாலை, மரியாதை என வரவேற்பு கொடுக்கப்பட்டதாம்.. பலாப்பழக்காரருக்கு அவரது ஊரில் வைத்து பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே வந்து, இணைப்பு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சேலத்துக்காரர் பேசியுள்ளார் என பலாப்பழக்காரர் தரப்பினர் டென்ஷனாக இருக்காங்களாம்..
இதனால், சேலத்துக்காரருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாமும் இங்கு ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், இதை முடித்த கையோடு சேலத்துக்காரரின் ஏரியாவிற்கே சென்று அவருக்கு அங்கேயே பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பலாப்பழக்காரர் தரப்பு யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.. ‘இப்படி போனா இணைப்பு எங்கே நடக்கும். இந்த ஓட்டை கப்பலில் இன்னும் எத்தனை நாள்தான் பயணிப்பதோ…’ என இலைக்கட்சியினர் புலம்பி வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்த விரக்தியில் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு தயாராகிவிட்டாங்களாமே பட்டதாரி இளசுகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன புதுச்சேரியில் ஆளுமைகள் மாறினாலும் எதிர்பார்த்தபடி வேலை வாய்ப்புகள் இல்லாததால் படித்த இளசுகள் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறாங்களாம்.. கடந்த 10 வருடமாக அரசாங்க காலியிடங்களும் அதற்குரிய காலக்கட்டத்தில் நிரப்பப்படாமல் கிடப்பில் கிடக்கிறதாம்..
இதனால் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் இளசுகள் என ‘காத்திருந்து… காத்திருந்து… காலங்கள் போகுதடி..’ என்ற சினிமா பாடல் வரிகளின்படி இதுவரையிலும் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சமாம்.. லட்சக்கணக்கானோர் அரசு வேலைக்காக உரிய தகுதிகளுடன் காத்திருந்த நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு வயது வரம்பும் முடிந்து விட்டதால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்களாம்.. சிலர் நியாயம் கேட்டு நீதிமன்றத்தை ஏற்கனவே நாடி இருக்கிறார்களாம்..
இது ஒருபுறமிருக்க, அடுத்த வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் 2025 பட்ஜெட்டிலாவது தங்களுக்கான வேலைவாய்ப்பு வருமா.. வராதா.. என்ற கேள்வியை இளைஞர்கள் முன்னெழுப்பி உள்ளார்களாம்.. அதோடு புல்லட்சாமி அரசை கண்டித்து சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்துக்கும் தயாராகி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி புதிய நிர்வாகிகள் பட்டியலால் கடைகோடி மாவட்டத்தில் புகைச்சல் தொடங்கிடுச்சாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் இலைகட்சியில் புதிய நிர்வாகிகள் அண்மையில் நியமிக்கப்பட்டாங்களாம்.. இதில் கிழக்கு மாவட்டத்தில் உள்ளவர்களை எல்லாம் மேற்கு மாவட்டத்தில் நிர்வாகிகளாக நியமித்திருக்காங்க.. இதில் சிலர் கிழக்கு மாவட்டத்திலும் பொறுப்பில் உள்ளவர்களாம்.. மேலும் கிழக்கு மாவட்ட செயலாளரான சுந்தரமானவர் சிலருக்கு பதவி கொடுக்க வேண்டாம் என்று நீக்கி வைத்திருந்தாராம்.. அவர்களையும் சேர்த்து மேற்கு மாவட்டத்தில் செயலாளரான தங்கமானவர் புதிய பட்டியலில் சேர்த்து தலைமைக்கு கொடுத்து நியமித்துள்ளாராம்..
சுந்தரமானவர் ஒதுக்கி வைத்திருந்தவர்களை எல்லாம் புதிய பட்டியலில் சேர்த்து பட்டியல் சேலம்காரர் பெயரில் வெளியானதை கண்ட சீனியர்கள் ஏன் எங்கள் மாவட்டத்தில் ஆள் இல்லாமலா இறக்குமதி செய்கிறீர்கள் எனக்கேட்க, புகைச்சல் தொடங்கியுள்ளதாம்.. அடுத்து நிர்வாகிகள் கூட்டம் நடக்கும்போது இதனை முக்கிய பிரச்னையாக வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரெண்டு அதிகாரிகளால் ஜெயிலுக்கே பூட்டு போட்டுட்டாங்களாமே எங்கேயாம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்துல மாவட்ட ஜெயில்னு ஒண்ணு இருக்கு.. இங்கு இருநூறு கைதிகளை வைக்கும் வசதி உண்டு.. மாங்கனி சென்ட்ரல் ஜெயிலுக்கு வரும் ரவுடி கும்பலை பிரித்து வைக்கவும், இந்த ஜெயில் உறுதுணையாக இருந்துச்சு.. இங்கிருந்த அதிகாரிகள் முதல் வார்டர்கள் வரை ரொம்பவே ஹேப்பியாகவே இருந்திருக்காங்க.. யார் கண் பட்டதோ தெரியல.. மாவட்ட ஜெயிலுக்கு இப்போ பூட்டு போட்டுட்டாங்களாம்.. அங்கிருந்த கைதிகள் அனைவரையும் சென்ட்ரல் ஜெயிலுக்கு மாத்திட்டாங்களாம்..
அதெப்படி, எல்லாம் சுமுகமாகத்தானே போச்சுது.. ஒரே நாள் இரவில் நடந்தது என்னன்னு தெரியாம வார்டர்கள் புலம்புறாங்களாம்.. என்னன்னு விசாரிச்சா இதற்கான காரணமும் தற்போது தெரிய வந்திருக்காம்.. இங்கிருந்த அதிகாரி ஒருவர், கைதிகளுக்கான சாப்பாட்டில் கை வச்சதா சஸ்பெண்ட் செய்யப்பட்டாராம்.. அவருக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் வேலைக்கு வந்தாராம்.. அதுவும் எந்த ஜெயிலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டாரோ அதே ஜெயிலுக்கு ஜம்முன்னு வந்து உட்கார்ந்தாராம்..
இந்த அதிசயம் எப்படி நடந்ததுன்னு தெரியாம எல்லோரும் விழிபிதுங்கி போயிட்டாங்களாம்.. இந்த ேசதி, சென்னையில் இருக்கும் உச்ச அதிகாரியின் காதுக்கு போயிருக்கு.. அவரது விசாரணையில், சென்னையில் இருக்கும் ரெண்டு உயர் அதிகாரிகள் இதற்கு உடந்தையா இருந்தது தெரியவந்துச்சாம்.. இதனால கோபத்தின் உச்சத்துக்கே போன அந்த அதிகாரி, அந்த ஜெயில் இருந்தால்தானே உங்களுக்கு பிடித்த நபரை அங்கேயே போடுவீங்க என்ற கேள்வியோடு ஜெயிலுக்கே பூட்டு போட்டுட்டாராம்.. அதே நேரத்தில் ரெக்கமெண்ட் செஞ்ச அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்ற பரபரப்பும் சூழ்ந்திருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post சேலத்துக்காரருக்கு பதிலடி கொடுக்க பலாப்பழக்காரர் தயாராகி வருவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.