சென்னை: ‘சட்டமன்றத்தில் வாக்கிங் போவது மட்டும்தான் ஆளுநரின் வேலையா? வருவார் எதிர்ப்பு தெரிவித்து விட்டு சென்று விடுவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள், சமத்துவ பொங்கல் விழா இடைக்கழிநாடு கப்பிவாக்கம் கலைஞர் திடலில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பொங்கல் விழாவா அல்லது பொங்கல் மாநாடா என்ற அளவில் மாவட்ட செயலாளர் சுந்தர் விழாவை நடத்தியுள்ளார். பொங்கல் திருநாள் மட்டும்தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட பண்டிகை. ஒன்றிய அரசு நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அகற்ற ஆசைப்படுகிறது.
ஆளுநர் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா, தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற வேண்டும் என்றார் ஆளுநர் ரவி. சட்டமன்றத்தில் வாக்கிங் போவது மட்டும்தான் ஆளுநரின் வேலையா, வருவாரு தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு வெளியில் சென்று விடுவார். தமிழ்நாடு பிடிக்காது, தமிழ்த்தாய் வாழ்த்து பிடிக்காது, பெரியார், அண்ணா, அம்பேத்கர், கலைஞர் யாரையும் பிடிக்காது. இப்படிப்பட்ட ஆளுநர் நமக்கு தேவையா? கடந்த தேர்தலில் அதிமுக, பாஜ பிரிந்து இருந்தது போல் காட்டினார்கள். இப்போது, ஒன்றாக சேரப் போகிறார்கள். 4 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், புதுமை பெண்கள் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இதுதான் நமது திராவிட மாடல் அரசு. இவ்வாறு அவர் பேசினார்.
The post வருவார்… எதிர்ப்பு தெரிவித்துவிட்டு சென்று விடுவார்… பேரவையில் வாக்கிங் போவது மட்டும்தான் ஆளுநரின் வேலையா?: துணை முதல்வர் உதயநிதி தாக்கு appeared first on Dinakaran.