புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறுகையில்,‘‘ நமது ராணுவத்தின் உச்சபட்ச வீரத்தையும் வெற்றியையும் போற்றும் வகையில் வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நாடு முழுவதும் ஜெய்ஹிந்த் சபா என்ற பெயரில் கூட்டம் நடத்தப்படும். டெல்லி, பார்மர், சிம்லா, ஹால்த்வானி, பாட்னா, ஜபல்பூர், புனே, கோவா, பெங்களூரு, கொச்சி, கவுகாத்தி, கொல்கத்தா, ஐதராபாத், புவனேஸ்வர் மற்றும் பதான்கோட் ஆகிய நகரங்களில் ஜெய்ஹிந்த் சபாக்கள் நடைபெறும். இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்’’ என்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், நாட்டின் பாதுகாப்பு குறைபாடுகள், தேசிய பாதுகாப்பை அரசாங்கம் கையாளும் விதம் பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும். தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்காவின் தலையீடு பற்றியும் அதில் ஒன்றிய அரசின் மவுனம் குறித்தும் நாம் கடுமையான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த ஜெய்ஹிந்த் சபா கூட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.