காஞ்சிபுரம், பிப்.6: காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிட்டராக பணிபுரிந்து வருபவர் கண்ணன். இவர், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்குவது, பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தபோது, பிட்டர் கண்ணன் மற்றும் அவரது மனைவி கஜலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இப்புகாரின்பேரில், காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், நேற்று காலை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார், காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி காமாட்சி அவென்யூ பகுதியில் உள்ள கண்ணன் வீட்டில் காலை 6.30 மணி முதல் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ₹2 லட்சத்து 16 ஆயிரத்து 120 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் ஏய்ப்பு செய்ததாகக்கூறி, மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் பிட்டர் கண்ணனை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காஞ்சி மாநகராட்சி ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: முக்கிய ஆவணங்கள், ₹2.16 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.