சென்னை: மகளிர் டி20, கோ-கோ போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணி உலக கோப்பையை வெல்ல துணைபுரிந்த தமிழக வீராங்கனை கு.கமாலினி, தமிழக வீரர் வி.சுப்பிரமணிக்கு உயரிய ஊக்கத் தொகையாக தலா ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மலேசியாவில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் பங்கேற்ற இந்திய அணியில், தமிழகத்தை சேர்ந்த கு.கமாலினி இடம்பெற்றிருந்தார். தான் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு அரை சதம், 143 ரன்கள், 2 கேட்ச், 4 ஸ்டம்பிங் என்று அவர் அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் கமாலினியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.