வருசநாடு: வருசநாடு அருகே சேதமடைந்து காட்சியளிக்கும் வெள்ளிமலை-அரசரடி மலைச்சாலையை விரைவாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் பொம்மராஜபுரம், வெள்ளிமலை, இந்திராநகர், நொச்சிஓடை உள்ளிட்ட ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராம மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மலை கிராமங்களில் விளையும் பீன்ஸ், எலுமிச்சை உள்ளிட்டவை தேனி, சின்னமனூர் ஆகிய சந்தைகளுக்கு இந்தச் சாலை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன.
மலை கிராமங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 முறை மட்டுமே அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் இந்தப்பகுதி பொதுமக்கள் அதிகளவில் இருசக்கர வாகனங்களையே நம்பியுள்ளனர். சென்று வருகின்றன. இந்த நிலையில் மலை கிராம மக்களின் வசதிக்காக கடமலைக்குண்டு முதல் வெள்ளிமலை வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் சென்று வர வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர். வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து நிற்கின்றன. மேலும் விபத்து அபாயமும் உள்ளது.
இதனால் விளைபொருட்களை சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதில் தாமதமும் சிரமமும் ஏற்படுவதால் விவசாயிகள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்து வெள்ளிமலை-அரசரடி சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வருசநாடு அருகே அரசரடி மலைச் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.